மிக இளம் வயது கிரிக்கெட் வீரர் என்ற விருதைப் பெற்று இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த இரண்டரை வயது சிறுவனை, கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி நேரில் பாராட்டியுள்ளார். சிறுவனின் கிரிக்கெட் ஆர்வத்தையும் கண்டு வியந்துள்ளார் தோனி.
சென்னையைச் சேர்ந்த சனுஷ் சூரிய தேவ், இரண்டரை வயதிலேயே மிக இளம் வயது கிரிக்கெட் வீரர் என்ற விருதைப் பெற்று இந்திய சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தவன். பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்தும் இந்தச் சிறுவன், கையில் எந்தப் பொருள் கிடைத்தாலும் சிக்ஸரும், பவுண்டரிகளுமாக விளாசும் திறமை கொண்டவன்.இந்தத் திறமையின் அடிப்படையில், சனுஷ் சூரிய தேவ் கடந்த வாரம் இந்திய சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளான்.
சனுஷின் பேட்டிங் ஸ்டைலைப் பார்த்து இந்திய கிரிக்கெட் வீரர் தோனியும் வியந்துள்ளார். சிறுவனையும், அவனது பெற்றோரையும் நேரில் அழைத்து பாராட்டியுள்ள தோனி, எதிர்காலத்தில் சிறந்த கிரிக்கெட் வீரராக வலம் வர வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.