விளையாட்டு

சாம்பியன்ஷிப் தடகளப் போட்டி: அமெரிக்கா முதலிடம்

சாம்பியன்ஷிப் தடகளப் போட்டி: அமெரிக்கா முதலிடம்

webteam

லண்டனில் நடைபெற்ற உலகச் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியில், அமெரிக்க அணி 30 பதக்கங்கள் வென்று முதலிடம் பிடித்தது. 

கடைசி நாளான நேற்று, மகளிர் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் அமெரிக்கா தங்கம் வென்றது. அமெரிக்க அணி 3 நிமிடம் 19.02 நொடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து முதலிடம் பிடித்தது. ஆடவர் பிரிவு தொடர் ஓட்டத்தில் அமெரிக்க அணியால் இரண்டாவது இடத்தையே பிடிக்க முடிந்தது. டிரினிடாட் அண்ட் டொபாகோ அணி தங்கம் வென்றது. 

ஆடவருக்கான ஆயிரத்து 500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கென்ய வீரர்கள் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர். ‌உயரம் தாண்டுதலில் கத்தார் வீரர் முத்தாஸ் பார்சிம், 2.35 மீட்டர் தாண்டி முதலிடம் பிடித்தார். 

லண்டனில் கடந்த 10 தினங்கள் களைகட்டிய போட்டிகளின் முடிவில், அமெரிக்கா 10 தங்கம், 11 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 30 பதக்கங்களை வென்று, முதலிடம் பிடித்தது. கென்யா 11 பதக்கங்களுடன் இரண்டாவ‌து இடத்தையும், தென்னாப்ரிக்கா 3 தங்கம் உட்பட 6 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தன. ஏற்கனவே ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட உசைன் போல்ட்டிற்கு, போட்டியின் கடைசி நாளில் பிரியா விடை கொடுக்‌கப்பட்டது.