’இப்படியொரு சாதனையை நிகழ்த்துவேன் என்று நினைக்கவில்லை’ என்று இந்திய வேகப் பந்துவீச்சாளர் தீபக் சாஹர் தெரிவித்துள்ளார்.
இந்தியா- பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி-20 போட்டி நாக்பூரில் நேற்றிரவு நடைபெற்றது. முதலில் ஆடிய இந்திய அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் சேர்த்தது. கே.எல்.ராகுல் 35 பந்துகளில் 52 ரன்களும் ஸ்ரேயாஸ் ஐயர் 33 பந்துகளில் 62 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் இறங்கிய பங்களாதேஷ் அணியில் இளம் வீரர் முகமது நைம் (48 பந்துகளில் 81 ரன்கள்) அதிரடியாக ஆடினார். இருந்தாலும் மறுமுனையில் அடுத்தடுத்து விக்கெட்கள் சரிந்தன. இதனால் அந்த அணி 19.2 ஓவர்களில் 144 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால், 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்திய தரப்பில், ஷிவம் துபே 3 விக்கெட்டுகளை எடுத்தார். தீபக் சஹார் அபாரமாக பந்துவீசி, ஹாட்ரிக் உள்பட 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.
அவர் 3.2 ஓவரில் வெறும் 7 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து இந்த விக்கெட்டுகளை சாய்த்தார். இது உலக சாதனை. சர்வதேச டி-20 போட்டிகளில் ஒரு பந்துவீச்சாளரின் சிறந்த பந்துவீச்சாக இது பதிவாகி இருக்கிறது.
இதற்கு முன் இலங்கை சுழற்பந்துவீச்சாளர் அஜந்தா மெண்டிஸ் 8 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. அதை முறியடித்துள்ளார் சாஹர்.
இந்தச் சாதனை குறித்து சாஹரிடம் கேட்டபோது, ’’இப்படி ஏதும் நடக்கும் என்று நான் நினைக்கவில்லை. இந்த சாதனை மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறேன். கடவுளின் உதவியால்தான் நான் இங்கு இருக்கிறேன். முக்கியமான ஓவர்களில் பந்துவீச வேண்டும் என்று என்னிடம் கூறப்பட்டது. அந்த பொறுப்பை அணி நிர்வாகம் என்னிடம் கொடுத்ததற்கு மகிழ்ச்சி’’ என்றார்.
ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதும் சாஹாருக்கு வழங்கப்பட்டது