விளையாட்டு

சிஎஸ்கே-வில் அடுத்த காயம்: தீபக் சாஹர் 2 வாரம் அவுட், வருகிறார் லுங்கி நிகிடி!

சிஎஸ்கே-வில் அடுத்த காயம்: தீபக் சாஹர் 2 வாரம் அவுட், வருகிறார் லுங்கி நிகிடி!

webteam

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பாடாய்ப்படுத்தும் காயப் பிரச்னையில் அடுத்தாகச் சேர்ந்திருக்கிறார், வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர். 

பதினோறாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இப்போது நடந்து வருகிறது. இந்தத் தொடரில், ஆரம்பம் முதலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, ’காயம்’ பாடாய்ப் படுத்தி வருகிறது. பயிற்சியின் போது முரளி விஜய் காயம் அடைந்தார். டுபிளிசிஸும் காயம் காரணமாக அணியில் இடம்பெறாமல் இருந்தார். பின்னர் முதல் போட்டியில் மிடில் ஆர்டரில் கலக்கும் கேதர் ஜாதவ் காயமடைந்து இந்தத் தொடரில் இருந்தே விலகினார். 

இரண்டாவது போட்டியில் ’சின்னத் தல’ சுரேஷ் ரெய்னா காயமடைந்தார். இதனால் அவர் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை. பிறகு அவர் மீண்டு வந்தார். இந்தத் தொடரில் சிஎஸ்கே அணியின் முதுகெலும்பாக இருக்கும் அம்பதி ராயுடுவும் காயமடைந்தார். ஆனால் அவர் தேறிவிட்டார். பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் முதுகு வலியால் அவதிப்பட்டார், கேப்டன் தோனி. அடுத்தப் போட்டிக்குள் அவர் தயாராகிவிட்டார். 

இந்தக் காயப் பிரச்னை குறித்து தோனி கூறும்போது, ‘அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள். அதனால் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம்’ என்று கூறியிருந்தார். இந்நிலையில் சிஎஸ்கே-வின் இளம் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹரும் காயத்தில் சிக்கியுள்ளார். 

மும்பைக்கு எதிராக நேற்று நடந்தப் போட்டியில் அவர், தனது மூன்றாவது ஓவரின் முதல் பந்தை வீசும் போது காயமடைந்தார். பின்னர் டிரெஸ்சிங் ரூம் சென்ற அவர் மைதானத்துக்குள் வரவில்லை. அவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் இரண்டு வாரம் ஓய்வெடுக்க உள்ளார். 

தீபக் சாஹர், சிஎஸ்கேவுக்காக 7 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக 15 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டை வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதே நேரம் தனது தந்தையின் திடீர் இறப்பு காரணமாக தென்னாப்பிரிக்கா சென்ற இளம் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி, அணிக்கு திரும்புகிறார். அவர் அடுத்தப் போட்டியில் களமிறங்க வாய்ப்பிருக்கிறது. இத்தகவலை சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் தெரிவித்துள்ளார்.