விளையாட்டு

பாட்ஷா பட ரேஞ்சில் சூர்யகுமார் யாதவ் கையில் முத்தமிட்ட சாஹல் - வைரல் வீடியோ

JustinDurai

சதம் விளாசிய சூர்யகுமார் யாதவின் கையை சாஹல் தன் கண்களில் ஒத்தி முத்தமிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி ஆட்டமிழக்காமல் 51 பந்துகளில் 112 ரன் சேர்த்தார்.  இதில் 9 சிக்ஸர்களும் 7 பவுண்டரிகளும் அடங்கும். சூர்யகுமாரின் அதிரடி ஆட்டத்தின் காரணமாகவே இலங்கைக்கு 229 ரன் என்ற கடினமான இலக்கு இந்திய அணியால் நிர்ணயிக்க முடிந்தது. இதனையடுத்து கடின இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 16.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதன்மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 2-1 என்ற கணக்கில் வெற்றி கண்டது.

112 ரன்களை விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்த சூர்யகுமார் யாதவ் ஆட்ட நாயகன் விருது வென்றார். கடந்த ஆறு மாதங்களில் சூர்யகுமார் யாதவ் அடிக்கும் 3வது சதம் இதுவாகும். போட்டிக்குப் பிறகு தனது ஆட்டம் குறித்து பேசிய சூர்யகுமார், ''விளையாட்டுக்குத் தயாராகும் போது உங்கள் மீது அழுத்தம் கொடுப்பது மிகவும் முக்கியம். எவ்வளவு அழுத்தம் கொடுக்கிறீர்களோ, அவ்வளவு சிறப்பாக விளையாட முடியும். இதில் நிறைய கடின உழைப்பு உள்ளது. சில தரமான பயிற்சி அமர்வுகளும் இதில் அடங்கும். பின்னால் இருந்த எல்லைகள் 59-60 மீட்டர்கள், அதனால் நான் அங்கு சிக்ஸ் அடிக்க முயற்சித்தேன். சில ஷாட்கள் முன்பே தீர்மானிக்கப்பட்டவை, ஆனால் நீங்கள் மற்ற ஸ்ட்ரோக்குகளுக்கும் தயாராக இருக்க வேண்டும்.  பெரும்பாலான நேரங்களில் நான் இடைவெளியைக் கண்டறிந்து களத்தை எனக்குச் சாதகமாகப் பயன்படுத்த முயற்சிக்கிறேன்.  இன்னிங்ஸ் சென்ற விதத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது 2023ல் ஒரு புதிய தொடக்கமாகும், மேலும் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவேன் என்று நம்புகிறேன்" என்று கூறினார்.



இதனிடையே 112 ரன் விளாசிய சூர்யகுமார் யாதவை யுஸ்வேந்திர சாஹல் வித்தியாசமாக பாராட்டிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், சாஹல் சூர்யகுமார் யாதவின் கையை தன் கண்களில் ஒத்தி முத்தமிடுகிறார். சதம் விளாசிய அந்த கைக்கு செய்யும் மரியாதையாக சாஹல் நெகிழ்ச்சியுடன் முத்தமிட்ட வீடியோவை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

தவற விடாதீர்: எந்த வீரரும் செய்யாத புதிய சாதனை படைத்த சூர்யகுமார்!இலங்கையை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா!