விளையாட்டு

88 ரன்களை கொடுத்த சாஹல் - வருத்தமான புதிய சாதனை

88 ரன்களை கொடுத்த சாஹல் - வருத்தமான புதிய சாதனை

webteam

உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் கொடுத்த இந்திய வீரர் என்ற வருத்தத்திற்குரிய புதிய சாதனையை சாஹல் படைத்துள்ளார்.

உலகக் கோப்பை தொடரின் 38வது லீக் போட்டி இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டான் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்தது. அந்த அணியில் பேர்ஸ்டோவ் 111 (109), பென் ஸ்டோக்ஸ் 79 (54), ஜாசன் ராய் 66 (57) மற்றும் ஜோ ரூட் 44 (54) ரன்கள் குவித்தனர். இந்திய அணியில் ஷமி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பும்ராவும் ரன்கள் குறைவாக கொடுத்து பந்துவீசியதுடன், ஒரு விக்கெட்டையும் எடுத்தார்.

அதேசமயம் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இருவரும் ரன்களை வாரிக் கொடுத்தனர். குல்தீப் 10 ஓவர்களில் 72 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். அதைவிட மோசமாக சாஹல் 10 ஓவர்களுக்கு 88 ரன்களை அள்ளிக்கொடுத்தார். விக்கெட் எதுவும் அவர் வீழ்த்தவில்லை. இது சாஹலின் மோசமான போட்டி மட்டுமல்ல, இதுவரை உலகக் கோப்பை வரலாற்றிலேயே இந்திய பந்துவீச்சாளர்களில் மோசமான பந்துவீச்சாகும்.

இதன்மூலம் உலகக் கோப்பையில் அதிக ரன்கள் கொடுத்த வீரர் என வருத்தத்திற்குரிய சாதனையை சாஹல் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக, 2003ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இந்திய வீரர் ஜவகல் ஸ்ரீநாத் 87 ரன்கள் கொடுத்திருந்தார். அதுவே சாதனையாக இருந்தது.