இந்த உலகக் கோப்பை தொடர் மிகவும் சவாலாக இருக்கும் என்று கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை தொடரில் விளையாட கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இன்றிரவு லண்டன் செல்கிறது. தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மற்றும் கேப்டன் விராட் கோலி இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.
விராட் கோலி பேசுகையில், “சிறந்த கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்பதை எங்களது எதிர்பார்ப்பு. நம்பிக்கையுடன் உலகக் கோப்பை தொடரில் விளையாட செல்கிறோம். இந்த ஐபிஎல் தொடரில் எங்களது வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடினர்.
நெருக்கடிகளை சமாளிப்பதே உலகக் கோப்பை தொடரில் முக்கியமானதாக இருக்கும். எங்களது பந்துவீச்சாளர்கள் அனைவரும் புத்துணர்ச்சியுடன் இருக்கிறார்கள். யாரும் சோர்வுடன் காணப்படவில்லை. குல்தீப், சாஹல் இருவரும் பவுலிங்கின் இரண்டு தூண்களாக இருப்பார்கள்.
அதிக ரன்களை குவிக்கும் போட்டிகளாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். கோடை காலம் என்பதால் இங்கிலாந்தின் கிளைமேட் அருமையாக இருக்கும். நான் பங்கேற்ற மூன்று உலகக் கோப்பைகளில் இந்தத் தொடர் மிகவும் சவாலானதாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.