மகளிர் அமைப்புகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல், கரண் ஜோஹர் ஆகியோர் மீது ராஜஸ்தான் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது
இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் ஆகியோர் இந்திப் பட இயக்குனர் கரண் ஜோஹரின் ‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்தனர். அவர்களது கருத்து சர்ச்சையானதை அடுத்து இருவரும் மன்னிப்புக் கேட்டனர். கரண் ஜோஹரும் வருத்தம் தெரிவித்தார். ஆனாலும் இருவரையும் அணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து இந்திய கிரிக்கெட் வாரியம் உத்தர விட்டது.
அவர்கள் செய்தது தவறு தான் என்றாலும் அவர்களுக்கு அணிக்கான வாய்ப்பு மறுக்கப்படக்கூடாது என பலரும் கருத்து தெரிவித்த நிலையில் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் மீதான தடையை நீக்கியது இந்திய கிரிக்கெட் வாரியம். அதன்படி ஹர்திக் பாண்ட்யா இந்திய அணியிலும், கேஎல் ராகுல் இந்திய ஏ அணியிலும் விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் பல்வேறு மகளிர் அமைப்புகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல், கரண் ஜோஹர் ஆகியோர் மீது ராஜஸ்தான் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.