விளையாட்டு

ஒலிம்பிக் போட்டிகளுக்கு வீரர்களை அனுப்பப் போவதில்லை -கனடா

webteam

ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்கவில்லை என்றால் தங்கள் நாட்டு வீரர்களை ஒலிம்பிக் போட்டிகளுக்கு அனுப்பப் போவதில்லை என கனடா தெரிவித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் உலக நாடுகளை நடுங்க வைத்துள்ளது. இந்த நிலையில் ஒலிம்பிக் தொடர் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளை ஒரு வடத்திற்கு ஒத்திவைக்கவில்லை என்றால் தங்கள் நாட்டு வீரர்களை ஒலிம்பிக் போட்டிகளுக்கு அனுப்பப் போவதில்லை என கனடா தெரிவித்துள்ளது. உடல் ஆரோக்கியத்தை விட வேறு எதுவும் முக்கியமில்லை எனவும் கனடா தெரிவித்துள்ளது.  இது தனிப்பட்ட வீரரின் உடல் நிலை சார்ந்த விஷயம் மட்டுமல்ல, வீரர்களின் குடும்பத்தினர் மற்றும் கனட மக்களின் ஆரோக்கியம் சார்ந்த விஷயம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாஹ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒலிம்பிக் போட்டிகளை தள்ளி வைப்பது உள்ளிட்ட அம்சங்களை விவாதிக்கவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஒலிம்பிக் போட்டிகள் குறித்த இறுதி முடிவு, நான்கு வாரங்களுக்குள் எடுக்கப்படும் எனவும் டோக்கியோ ஒலிம்பிக் தொடரை ரத்து செய்யும் திட்டமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.