ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில், டெல்லியில் இன்று நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன.
பனிரெண்டாவது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. டெல்லியில் இன்று நடக்கும் 5-வது லீக் போட்டியில், தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணியும் மோதுகின்றன.
சென்னையில் நடந்த முதல் போட்டியில், பெங்களூரு அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிஎஸ்கே. டெல்லி அணி, முதல் ஆட்டத்தில் 37 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வென்றுள்ளது. அந்த அணியின் ஸ்டார் பேட்ஸ்மேனாக ரிஷாப் பன்ட் இருக்கிறார். மும்பையுடனான போட்டியில் அவர், 27 பந்தில் 78 ரன் விளாசினார். அந்த அணியின் துருப்பு சீட்டாக இருக்கும் அவர் தோனியின் சிஷ்யன்! இன்று குருவுடன் மோதுகிறார் ரிஷாப். அதனால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
டெல்லி அணியில், ரிஷாப் தவிர பிருத்வி ஷா, ஷிகர் தவான், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், இங்க்ரம் ஆகியோர் ஃபார்மில் இருக்கிறார்கள். வேகப்பந்துவீச்சில் டிரன்ட் போல்ட், இஷாந்த் சர்மா, ரபாடா ஆகியோர் சிஎஸ்கே அணிக்கு கடும் சவால் கொடுப்பார்கள்.
சென்னையில் நடந்த போட்டியில், சேப்பாக்கம் மைதானம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. அதனால் அனுபவம் வாய்ந்த இம்ரான் தாஹிர், ஹர்பஜன், ஜடேஜா கூட்டணி விக்கெட்டுகளை எளிதாக வீழ்த்தியது. டெல்லி பிட்ச் அப்படி இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. அதனால் இம்ரான் தாஹிர் அல்லது ஹர்பஜன் சிங் ஆகியோரில் ஒருவர் மட்டுமே அணியில் இடம்பெறுவார்கள் என்றும் வேகப்பந்து வீச்சாளர் டேவிட் வில்லே சேர்க்கப்படலாம் என்றும் தெரிகிறது.
சிஎஸ்கே அணியில், முதல் போட்டியில் ஷேன் வாட்சன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா ஆகியோர் சொல்லிக்கொள்ளும்படி ரன் எடுக்கவில்லை. பந்துவீச்சில் தீபக் சாஹர், இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங், ஜடேஜா கலக்கினார்கள். இன்றைய போட்டி சிஎஸ்கே-வின் திறமையை சோதிக்கும் வாய்ப்பாக அமையும்.
சொந்த மண்ணில் ஆடுவது டெல்லி அணிக்கு சாதக மானது என்றாலும் சிஎஸ்கே அணியின் அனுபவ வீரர்கள், அதை திறமையாக சமாளிப் பார்கள் என்கிறார்கள் விமர்சகர்கள். இரு அணிகளும் இதுவரை 18 முறை மோதியிருக்கின்றன. இதில் சிஎஸ்கே 12 முறையும், டெல்லி 6 முறையும் வென்றுள்ளன. இரவு 8 மணிக்கு போட்டித் தொடங்குகிறது.