2013 ஆம் ஆண்டு மொகாலியில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் ஒரு ஓவரில் 30 ரன்களை கொடுத்ததற்கு காதலியை தொடர்புக்கொண்டு பேசி கதறி அழுதேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார்.
2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அப்போது பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவின் ஒரு ஓவரில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் 30 ரன்களை விளாசினர். அந்த ஓவரில் இஷாந்த் எப்படி பந்துவீசினாலும் பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக பறந்தது.
இப்போது அந்தப் போட்டி குறித்துப்பேசிய இஷாந்த் சர்மா "அந்தப் போட்டி முடிந்ததும் என்னுடைய காதலியை தொடர்புக்கொண்டு பேசினேன். அப்போது ஒரு குழந்தையைப் போல கதறி கதறி அழுதேன். நான் என்னுடைய நாட்டை ஏமாற்றிவிட்டேன் என நினைத்து வருந்தினேன். அந்தப் போட்டி முடிந்த பின்பு இரண்டு மூன்று வாரங்களுக்கு யாருடனும் நான் பேசவில்லை. அப்போது அதிகமாக அழுதேன், அந்த வாரங்கள் மிகவும் மோசமானவை" என தெரிவித்துள்ளார்.