வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் ஹனுமா விஹாரி அபார சதம் அடித்தார். வேகப்பந்துவீச்சாளர் பும்ரா 6 விக்கெட்டுகளை அள்ளினார்.
இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கிறது. முதலாவது டெஸ்டில் இந்திய அணி, 318 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றது.
2 வது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டனில் நடந்து வருகிறது.
முதலில் ஆடிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுக்கு 264 ரன்கள் எடுத்திருந்தது. மயங்க் அகர்வால் 55 ரன்களும் விராத் கோலி 76 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்திருந்தனர். ஹனுமா விஹாரி 42 ரன்களுடனும் ரிஷாப் பன்ட் 27 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று தொடர்ந்தது. சிறப்பாக ஆடிய விஹாரி, தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். அவர் 111 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்கு துணையாக நின்ற இஷாந்த் சர்மா அரைசதம் விளாசினார். அவர் 57 ரன்கள் எடுத்தார். பின்னர் இந்திய அணி 416 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஹோல்டர் 5 விக்கெட்டுகளையும் கெமர் ரோச் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
பின்னர் அந்த அணி, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. இந்திய பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால், அந்த அணியில் யாரும் நிலைத்து நிற்கவில்லை. தொடக்கத்திலேயே கேம்பல் விக்கெட்டை எடுத்த பும்ரா, அடுத்து ஹாட்ரிக் விக்கெட் வீத்தினார். அவர் டேரன் பிராவோ, புரூக்ஸ், சேஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து சாய்த்தார்.
நேற்றைய ஆட்ட நேர முடிவில் அந்த அணி 7 விக்கெட்டுக்கு 87 ரன்கள் எடுத்துள்ளது. பும்ரா 6 விக்கெட்டுகளையும் ஷமி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். மூன்றாவது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.