கிரிக்கெட்டில் மட்டும்தான் எல்லா விஷயங்களுக்கும் ரெக்கார்ட் இருக்கிறது. இத்தனை சதம், இத்தனை அரை சதம், இத்தனை விக்கெட் என்பது போல பல விஷயங்கள் சாதனையாக்கப்படுகிறது. அந்தச் சாதனையில் ’சென்னை செல்லம்’ பிராவோவின் இந்த விஷயத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்!
வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் பிராவோவுக்கு இப்போது, 34 வயது. 161 சர்வதேச ஒரு நாள் போட்டியில் விளையாடியுள்ள இவர், 199 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். 2968 ரன்கள் சேர்த்துள்ளார். டெஸ்ட் போட்டியில் 86 விக்கெட்டும் 2200 ரன்களும் டி20-யில் 66 போட்டிகளில் விளையாடியுள்ள பிராவோ, 52 விக்கெட்டையும் 1142 ரன்களையும் எடுத்துள்ளார்.
தற்போது தேசிய அணியில் இடம் கிடைக்காத நிலையில், டி20 லீக் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார். ஐபிஎல் தொடரில் சென்னை யின் செல்லப்பிள்ளையாக சிஎஸ்கே-வில் இருக்கிறார். டி20 ஸ்பெஷலிஷ்டான இவர், இது தவிர, ஆஸ்திரேலியாவின் சிட்னி, பாகிஸ் தானின் லாகூர் காலண்டர்ஸ், கனடாவின் வின்னிபெக் ஹாக்ஸ், இங்கிலாந்தின் மிடிலெக்ஸ் என இதுவரை இருபது டி20 அணிகளில் பங்கேற்றுள்ளார்.
ஒவ்வொரு அணியின் ஜெர்ஸியை வைத்து கண்காட்சி நடத்தும் அளவுக்கு கலர் கலராக அடுக்கி வைத்திருக்கிறார். ’இருபது என்பது ஓவர்கள். அதை அணி என தவறாக நினைத்துவிட்டாரோ?’ என கிண்டலடிக்கின்றனர் சக வீரர்கள்.