விளையாட்டு

டென்னிஸ், கிரிக்கெட் மைதானங்களில் சாதிக்கும் ஆஸி. வீராங்கனை

டென்னிஸ், கிரிக்கெட் மைதானங்களில் சாதிக்கும் ஆஸி. வீராங்கனை

webteam

டென்னிஸ் மற்றும் கிரிக்கெட் போட்டிகளில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஒருவர் சாதித்து வருகிறார்.

பதினைந்து வயதில் ஜூனியர் விம்பிள்டன் போட்டியில் பட்டம் வென்று டென்னிஸ் உலகில் அழுத்தமான முத்திரை பதித்த அஸ்லே பார்டி (Ashleigh Barty), 2013ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் பெண்கள் இரட்டையர் போட்டிக்குத் தகுதி பெற்று கவனம் ஈர்த்தார். அதே ஆண்டில் கேசே டெலாகுவா எனும் சகநாட்டு வீராங்கனையுடன் இணைந்து விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் இரட்டையர் ஆட்டத்தில் இறுதிப் போட்டி வரை முன்னேறி உலக டென்னிஸ் ரசிகர்களைக் கவர்ந்தார். ஆனால், 2014ம் ஆண்டு செப்டம்பரில் தோள்பட்டை காயத்தால் டென்னிஸிலிருந்து சிறிதுகாலம் ஓய்வு பெறுவதாக அறிவித்து ஆஸ்திரேலிய டென்னிஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

அதன் பின்னர் கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்திய பார்டி, கடந்த ஆண்டில் ஆஸ்திரேலியாவில் பெண்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட பிக்பேஷ் டி20 தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக களமிறங்கினார். களம் கண்ட முதல் போட்டியிலேயே 39 ரன்கள் குவித்து அசத்தினார். இந்த நிலையில், டென்னிஸ் உலகில் தற்போதைய ஆஸ்திரேலிய ஓபன் மூலம் மீண்டும் கால் பதித்துள்ள பார்டி, நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு என்று முதல் போட்டியிலேயே முத்திரை பதித்துள்ளார். முதல் சுற்றில் ஜெர்மனியின் அன்னிக்கா பெக்கைச் சந்தித்த பார்டி, 6-4, 7-5 என்ற நேர்செட்களில் வெற்றியைத் தனதாக்கினார்.