இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் தவான், வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர்குமார் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒரு நாள், 3 டி20 போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. அடுத்த டெஸ்ட் போட்டி நாக்பூரில் வரும் 24 ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் திருமணம் காரணமாக புவனேஷ்வர் குமார் அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். தனிப்பட்ட காரணமாக தனக்கும் விடுப்பு வேண்டும் என்று கேட்டதால் தவான் அடுத்த டெஸ்ட் போட்டியில் இருந்து மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தமிழக வீரர், ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இத்தகவலை இந்திய கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. மூன்றாவது போட்டியில் இந்திய கேப்டன் விராத் கோலிக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.