இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
கடைசி ஒருநாள் போட்டி என்பதால் வெற்றி பெற்று ஒயிட் வாஷை தவிர்க்க இலங்கை அணி போராடும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் புவனேஷ்குமார் வேகத்தில் விக்கெட்டுக்களை பறிகொடுத்து மீண்டும் சோபிக்க தவறிவிட்டனர்.
3-வது ஓவரில் டிக்வெல்லா, 7-வது ஓவரில் முனவீரா விக்கெட்டுகளை புவனேஷ்குமார் சாய்த்தார். பின்னர் தரங்கா மற்றும் திரிமன்னே ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். தரங்கா தொடக்கம் முதலே அடித்து விளையாடினார். இருப்பினும் 48 ரன்கள் எடுத்திருந்தபோது பும்ரா பந்துவீச்சில் தோனியிடம் கேட்சாகி வெளியேறினார். இலங்கை அணி அப்போது 9.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்திருந்தது.
பின்னர், திரிமன்னே, மேத்யூஸ் ஜோடி இலங்கை அணியை சரிவில் இருந்து மீட்டனர். நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இருவரும் அரைசதம் அடித்தனர். திர்மன்னே(67), மேத்யூஸ்(5) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இவர்கள் ஆட்டம் இழக்கும் வரை இலங்கை அணி 270 ரன்கள் எடுக்கும் என்று எதிர்ப்பர்க்கப்பட்டது. இருவரது விக்கெட்டையும் புவனேஷ்குமார் வீழ்த்தினார். ஆனால், இலங்கை அணியின் சரிவை கட்டுப்படுத்த முடியவில்லை. பின்னர் களமிறங்கியவர்கள் வந்த வேகத்தில் நடையை கட்ட இலங்கை அணி 49.4 ஓவர்களில் 238 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
புவனேஷ்குமார் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். புவனேஷ்குமாருக்கு இது முதல் 5 விக்கெட் ஆகும். இதனையடுத்து, 239 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.