இந்தியா  எக்ஸ்
விளையாட்டு

IND Vs AUS | நாளை 2வது டெஸ்ட் போட்டி.. இந்திய அணியில் மாற்றம்.. மிடில் ஆர்டரில் களமிறங்கும் ரோகித்!

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 2வது போட்டி, நாளை (டிச.6) காலை அடிலெய்டு மைதானத்தில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக தொடங்குகிறது.

Prakash J

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கான முதல் டெஸ்ட் போட்டி, கடந்த நவம்பர் 22ஆம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்திய அணியை துணை கேப்டன் பும்ரா வழிநடத்தினார். இதில், முதலில் பேட் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்குச் சுருண்டது. அதேநேரத்தில், ஆஸ்திரேலிய அணியையும் 104 ரன்னுக்குள் சுருட்டியது. இதைத் தொடர்ந்து வீறுகொண்ட இந்திய அணி, ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி ஆகியோரின் சதத்துடன் 487 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து 524 ரன்களை, ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது. ஆனால், இந்திய அணியின் சாதுர்யமான பந்துவீச்சால் அந்த அணி 238 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து பும்ரா தலைமையிலான இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றிபெற்றது.

ரோகித் சர்மா

இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது போட்டி, நாளை (டிச.6) காலை அடிலெய்டு மைதானத்தில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக தொடங்குகிறது. தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் போட்டியில் விளையாடாத கேப்டன் ரோகித் சர்மா, மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள நிலையில், இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சில மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேவ்தத் படிக்கல் மற்றும் துருவ் ஜுரெல் இருவருக்குப் பதிலாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் சேர்க்கப்படவுள்ளனர். தவிர, தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வாலும், கே.எல்.ராகுலுமே களமிறங்குவார்கள் என ரோகித் தெரிவித்துள்ளார். அவர், மிடில் ஆர்டரில் களம் இறங்குவதாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவர்மீது எதிர்பார்ப்பு கூடியுள்ளது. காரணம், அவர் எந்த இடத்தில் களமிறங்குவார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதேநேரத்தில் அவர் கடந்தகால டெஸ்ட்களில் நடுநிலை வீரராக இறங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் ஆஸ்திரேலியா அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காயம் காரணமாக வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட் விலகியதால், அவரது இடத்தில் ஸ்காட் போலண்ட் சேர்க்கப்பட்டிருக்கிறார். இதனால் வழக்கம்போல் ஆஸ்திரேலியா அணி 4 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் ஒரு ஸ்பின்னர் என்று பவுலிங் கூட்டணியுடன் களமிறங்க உள்ளது.

விராட் கோலி

அடிலெய்டு மைதானத்தில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இதுவரை 13 முறை மோதியுள்ளன. இதில் ஆஸ்திரேலியா 8 முறையும், இந்தியா 2 முறையும் வென்றுள்ளன. 3 போட்டிகள் டிரா ஆகியுள்ளன. இளம்சிவப்பு நிற பந்தில் ஒருமுறை போட்டி நடைபெற்றுள்ளது. அதில் ஆஸ்திரேலியாவே வாகை சூடியுள்ளது. இந்த மைதானத்தில் கடைசியாக நடைபெற்ற 5 போட்டிகளில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தலா 2 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளன. ஒரு போட்டி சமன் அடைந்துள்ளது. மொத்தத்தில் இரு அணிகளுக்கிடையே 108 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா 45 வெற்றிகளையும் இந்தியா 33 போட்டிகளிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளன. 29 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. இந்த மைதானத்தில், அதிகபட்சமாக இங்கிலாந்து அணி, கடந்த 2010ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 620 ரன்களைக் குவித்தது. தற்போதைய வீரர்களில் விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ரன்களைக் குவித்த வீரராக திகழ்கிறார். அவர், 2147 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய தரப்பில், ஸ்மித் இந்தியாவுக்கு எதிராக 2059 ரன்கள் எடுத்துள்ளார்.