விளையாட்டு

அனல் பறக்கும் ஏலம்.. ஸ்மிருதி மந்தனாவை ரூ.3.4 கோடிக்கு தட்டி தூக்கியது ஆர்சிபி!

webteam

இந்திய அணியின் தொடக்க வீராங்கனையும் துணை கேப்டனுமான ஸ்மிருதி மந்தனா ரூ.3.4 கோடிக்கு பெங்களூரு அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

இந்தியாவில் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போன்று, மகளிருக்கும் ஐபிஎல் போட்டிகளை நடத்த கடந்த ஆண்டுமுதலே பிசிசிஐ திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகிறது. இந்த ஆண்டு மார்ச் 4 முதல் 26 வரை நடக்கவுள்ள இந்த மகளிரி ஐபிஎல் போட்டியில் அகமதாபாத், மும்பை, பெங்களூரு, டெல்லி, லக்னோ உள்ளிட்ட 5 நகரங்களை அடிப்படையாகக் கொண்டு அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, கடந்த மாதம் எடுக்கப்பட்ட அணிகளின் ஏலத்தில், அகமதாபாத் அணியை அதானி நிறுவனம் ரூ.1,289 கோடிக்கும் மும்பை அணியை இந்தியாவின் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ரூ. 912.99 கோடிக்கும், பெங்களூரு அணியை ராயல் சேலஞ்சர்ஸ் நிறுவனம் ரூ. 901 கோடிக்கும், டெல்லி அணியை ஜேஎஸ்டபிள்யூ ஜிஎம்ஆர் நிறுவனம் ரூ. 810 கோடிக்கும், லக்னோ அணியை கேப்ரி குளோபல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் ரூ. 757 கோடிக்கும் ஏலம் எடுத்திருந்தன.

இந்த நிலையில், மகளிர் ஐபிஎல் போட்டிக்கான வீராங்கனைகள் ஏலம் இன்று நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, மும்பையில் இன்று 2.30 மணிக்கு ஏலம் தொடங்கியது. இதில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனையும் துணை கேப்டனுமான ஸ்மிருதி மந்தனா ரூ.3.4 கோடிக்கு பெங்களூரு அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். இவரை ஏலம் எடுக்க மும்பை அணியும் முனைப்பு காட்டியது.

அதுபோல், நியூசிலாந்து ஆல்ரவுண்டர் சோஃபி டிவைனை, ரூ.50 லடசத்துக்கு பெங்களூரு அணி ஏலம் எடுத்துள்ளது. இந்திய மகளிர் அணியின் கேப்டனான ஹர்மன்ப்ரீத் கவுரை, மும்பை அணி ரூ.1.8 கோடிக்கு ஏலம் எடுத்தது.

- ஜெ.பிரகாஷ்