விளையாட்டு

முதல் போட்டியில் கலக்கிய ஸ்டோக்ஸ் 2-வது போட்டியில் அவுட்!

முதல் போட்டியில் கலக்கிய ஸ்டோக்ஸ் 2-வது போட்டியில் அவுட்!

webteam

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது. 

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, பர்மிங்ஹாமில் நடந்தது. இந்தப் போட்டியில், முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 287 ரன்களும், இந்திய அணி 274 ரன்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸில், இங்கிலாந்து அணி 180 ரன்கள் எடுத்தது. ஆனால், இங்கிலாந்து அணி நிர்ணயித்த இலக்கை எட்ட முடியாமல் 162 ரன்களுக்குள் சுருண்டு தோல்வியை சந்தித்தது, இந்திய அணி. இரண்டாவது இன்னிங்ஸில் பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக பந்துவீசி, இங்கிலாந்தின் வெற்றிக்கு காரணமானார்.


முதல் இன்னிங்ஸில் இரண்டு விக்கெட்டை வீழ்த்திய அவர், இரண்டாவது இன்னிங்ஸில் கே.எல்.ராகுல், விராத் கோலி, ஹர்திக் பாண்ட்யா, ஷமி ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். 

முதல் டெஸ்ட் போட்டியில் மிரட்டிய பென் ஸ்டோக்ஸ் அடுத்தப் போட்டியில் ஆட மாட்டார் என்று கூறப்படுகிறது. 

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, கடந்த வருடம் செப்டம்பர் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடியது. பிரிஸ்டல் நகரில் நடந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. போட்டிக்குப் பின் மதுபான விடுதிக்கு சென்ற பென் ஸ்டோக்ஸும் ஹேல்ஸும் அங்கு போதையில், இரண்டு பேரை அடித்து உதைத்தனர். வீடியோ, காட்சிகள் வெளியாகி பரபரப்பானது. இதையடுத்து ஸ்டோக்ஸ் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். இதையடுத்து விசாரணை முடியும் வரை சர்வதேச போட்டிகளுக்கு ஸ்டோக்ஸும் ஹேல்ஸும் பரிசீலிக்கப் படமாட்டார்கள் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. பின்னர் இந்த வருடம் அவர்கள் அணியில் மீண்டும் இணைந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நாளை வருகிறது. தான் தவறு ஏதும் செய்யவில்லை என்றும் வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்றும் ஸ்டோக்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் கோர்ட் என்ன நடவடிக்கை என்பதை பொறுத்தே அவர் அணிக்கு திரும்ப முடியும். வழக்கு தள்ளி வைக்கப்பட்டாலும் அவர் அடுத்த போட்டியில் விளையாட முடியும். இதற்கிடையே அவருக்கு பதிலாக கிறிஸ் வோக்ஸ் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட இருக்கிறார்.