விளையாட்டு

“அன்று மைதானத்திலேயே அழுதார்”.. உலக கோப்பைகளை நனவாக்கிய ‘பென் ஸ்டோக்ஸ்’ எனும் மேஜிக் மேன்!

“அன்று மைதானத்திலேயே அழுதார்”.. உலக கோப்பைகளை நனவாக்கிய ‘பென் ஸ்டோக்ஸ்’ எனும் மேஜிக் மேன்!

Rishan Vengai

நியூசிலாந்தில் பிறந்த ஒருவர் ”கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்தின் கோப்பை கனவுகளை நிஜமாக்கினார்” என்றால் நம்புவீர்களா, பென் ஸ்டோக்ஸ் எனும் ஒரு மேஜிக் மனிதனால் இங்கிலாந்து அணிக்கு அது சாத்தியப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணியா அதுவெல்லாம் கோப்பையை வெல்லாது, கிரிக்கெட்டை கண்டுபிடித்ததெல்லாம் அவர்களாக இருக்கலாம் ஆனால் கோப்பையை பற்றிய கனவையெல்லாம் அவர்கள் கனவில் மட்டும் பார்க்க வேண்டும் என்ற கூற்று பென் ஸ்டோக்ஸ் வருவதற்கு முன்பும், பின்பும் கூட இருந்தது. ஏதோ 2010 கோப்பையை லக்கில் ஜெயித்துவிட்டார்கள், கிரிக்கெட்டின் முழு வடிவமான போட்டிகள் என்றால் அது ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் தான் என்ற பேச்சுகள் ஒவ்வொரு இங்கிலாந்தின் வெற்றியின் போதும் வைக்கப்பட்டது. அவற்றை எல்லாம் தகர்த்த பெருமை நிச்சயம் பென் ஸ்டோக்ஸ் எனும் ஒருவருக்கே சேரும் என்றால் அது மிகையாகாது.

யாரு பா இந்த பையன் 19 ரன்கள கூட கட்டுப்படுத்த தெரியல!

அது 2016 டி20 உலகக்கோப்பை தொடர், அரையிறுதியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டிஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தன. இந்தியாவில் நடைபெற்ற அந்த தொடரில் இறுதிப்போட்டி கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஜோ ரூட் மற்றும் ஜாஸ் பட்லர் உதவியால் 20 ஓவர்களுக்கு 155 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆடிய வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிராக 6 விக்கெட்டுகளை கைப்பற்றி கட்டுக்குள்ளேயே வைத்திருந்தது இங்கிலாந்து அணி.

கடைசி 6 பந்துகளுக்கு 19 ரன்கள் தேவை என்ற இடத்தில், கடைசி ஓவர் வீச வந்த பென் ஸ்டோக்ஸின் முதல் 4 பந்துகளையும் சிக்சர்களாக மாற்றினார் பிராத்வெய்ட். 2 பந்துகளை வெளியில் வைத்து கோப்பையை தட்டிச்சென்றது வெஸ்ட் இண்டிஸ் அணி. தோல்வியின் போது மைதானத்திலேயே உட்கார்ந்து அழுவார் பென் ஸ்டோக்ஸ். அன்று யாரு பா இது பந்தே போட தெரியல என்று தூற்றி சென்றவர்களை எல்லாம், யாரு பா இது இப்படி விளையாடுறார், எங்கயோ இருந்த போட்டியை வென்று கொடுத்திருக்கிறார் என்று பேச வைத்தது தான் பென் ஸ்டோக்ஸ் எனும் மேஜிக் மனிதனின் சாதனை.

2019 ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற பென் ஸ்டோக்ஸ்

2019 ஒருநாள் உலகக்கோப்பையை இங்கிலாந்து அணி வெல்லவில்லை என்று சொன்னால் ஏற்றுகொள்வீர்களா. ஆம் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வென்றது இங்கிலாந்து அணி இல்லை, பென் ஸ்டோக்ஸ் என்ற தனி ஒருவர் தான்.

இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்து 241 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இரண்டாவது இன்னிங்க்ஸை ஆடிய இங்கிலாந்து எளிதாகவே வெற்றிபெற்றுவிடும் என்று நினைத்த இடத்தில், நியூசிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுக்க 86 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இங்கிலாந்து அணி. பின்னர் கைக்கோர்த்த பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜாஸ் பட்லர் இருவரும் பெரிய பார்ட்னர்ஷிப் போட, பட்லர் 59 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினாலும் இறுதிவரை போராடிய பென் ஸ்டோக்ஸ் 84 ரன்கள் எடுத்து போட்டியை சூப்பர் ஓவர் வரை எடுத்து செல்வார்.

சூப்பர் ஓவரிலும் பென் ஸ்டோக்ஸ் தான் இங்கிலாந்து அணிக்காக 8 ரன்களை பெற்றுத்தருவார். பட்லர் அவுட்டான இடத்தில் பென் ஸ்டோக்ஸ் அவுட்டாகி இருந்தால் நிச்சயம் கோப்பையை நியூசிலாந்து அணி தட்டிச்சென்றிருக்கும். சிறப்பாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகன் விருதை தட்டிச்சென்றார்.

1 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்ற மேஜிக் மேன்

2019 உலக டெஸ்ட் சாம்பியன்சிப் தொடரில் இங்கிலாந்துக்கு சென்ற ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று ஆடியது. அப்போது முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி 1 போட்டியை வென்று முன்னிலையில் இருக்கும், 3ஆவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்க்ஸில் 67 ரன்களுக்கு ஆல் அவுட்டான இங்கிலாந்து அணி அந்த போட்டியை வென்றது என்றால் நம்பமுடிகிறதா, அதையும் செய்து காட்டினார் பென் ஸ்டோக்ஸ்.

முதல் இன்னிங்க்ஸில் 67 ரன்களுக்கு சுருண்ட இங்கிலாந்து அணிக்கு இரண்டாவது இன்னிங்க்ஸில் 359 ரன்களை இலக்காக நிர்ணயிக்கும் ஆஸ்திரேலிய அணி, இந்த போட்டியை ஆஸ்திரேலியாவே வென்று 2-0 என்று லீட் எடுக்கும் என்று நினைத்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார் பென் ஸ்டோக்ஸ். 286 ரன்கள் இருந்த நிலையில் 9 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி 361 ரன்கள் அடித்து வெற்றிபெற்றது. அனைத்து விக்கெட்டுகளும் இழந்த இங்கிலாந்து அணியை தனி ஒருவராக களத்தில் நின்று, கடைசி விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் எடுத்து சென்று இங்கிலாந்து அணிக்கு வெற்றியைத் தேடி தருவார் பென் ஸ்டோக்ஸ். 135 ரன்களுடன் அவுட்டாகாமல் களத்தில் இருந்து, 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை தேடிக்கொடுத்து தொடரை 1-1 என்று சமன் செய்து யாரும் செய்யாத மேஜிக்கை நிகழ்த்தி காட்டினார் பென் ஸ்டோக்ஸ்.

2016ல் விட்ட டி20 உலகக்கோப்பை 2022ல் வென்று சாதனை

2022 டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான இறுதிப்போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 137 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி பதிலடி கொடுத்தது பாகிஸ்தான் அணி.

என்ன தான் ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுபுறம் நிலைத்து நின்று விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 52 ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் நின்று இங்கிலாந்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். அவரது விக்கெட்டை மட்டும் பாகிஸ்தான் அணி எடுத்திருந்தால் இந்த போட்டி பாகிஸ்தான் அணிக்கு சாதகமானதாக முடிந்திருக்கும்.

2016ல் அழுகையுடன் தொடங்கிய அவரது டி20 பயணத்தை 2022ன் கோப்பையை வென்று மாற்றிக்காட்டியுள்ளார் மேஜிக் மேனான பென் ஸ்டோக்ஸ்.