விளையாட்டு

டெஸ்ட் போட்டியில் இப்படியொரு ஃபினிஸிங்கா..! - மிரள வைத்த ஸ்டோக்ஸ்

டெஸ்ட் போட்டியில் இப்படியொரு ஃபினிஸிங்கா..! - மிரள வைத்த ஸ்டோக்ஸ்

rajakannan

இங்கிலாந்து அணி தன்னுடைய கிரிக்கெட் வரலாற்றில் இப்படியொரு சேஸிங் செய்திருப்பது மிகவும் அரிது. அப்படி மிகவும் அரிதான ஒரு விஷயத்தை முடித்து காட்டியிருக்கிறார் பென் ஸ்டோக்ஸ். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியை தனி ஆளாக போராடி வென்று கொடுத்துள்ளார் ஸ்டோக்ஸ்.

359 ரன்கள் என்ற இலக்குடன் தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 286 ரன்கள் எடுப்பதற்குள் 9 விக்கெட்டை இழந்துவிட்டது. ஸ்டோக்ஸ் அப்போது வெறும் 61 ரன்களுடன் களத்தில் இருந்தார். கடைசி விக்கெட்டாக லீச் களமிறங்கினார். வெற்றி பெற அடுத்து 73 ரன்கள் தேவை. வெற்றி பெறுவதற்கு மிகவும் குறைவான வாய்ப்பே இருந்தது. டெஸ்ட் போட்டியில் 73 ரன்கள் எடுப்பது அவ்வளவு எளிதல்ல. அதுவும் ஒரே ஒரு விக்கெட்டை கையில் வைத்துக் கொண்டு வெற்றி பெறுவது எளிதில் சாத்தியப்படக் கூடியது அல்ல. 

இருப்பினும், 9வது விக்கெட் வீழ்ந்த அந்த தருணத்தில் இருந்து ஸ்டோக்ஸ் அதிரடியில் இறங்கினார். துணிச்சலாக பந்துகளை பறக்கவிட்டார். அதுவும் சிக்ஸர்கள் விளாசி இங்கிலாந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். லையன், கம்மின்ஸ், ஹால்ஸ்வுட் ஓவர்களில் சிக்ஸர்கள் பறக்கவிட்டார். மின்னல் வேகத்தில் ரன்கள் சேர்த்தார். ஒருநாள் போட்டியில் கூட இவ்வளவு வேகமாக ரன்கள் அடிக்கமாட்டார்கள். ஆனால், டெஸ்ட் போட்டி என்று கூட பார்க்காமல் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை பதம் பார்த்தார். 10.2 ஓவர்களிலே 76 ரன்கள் குவிக்கப்பட்டது. இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், எதிர் முனையில் இருக்கும் லீச்சை பேட்டிங் செய்யவிடாமல் வெறும் 17 பந்துகளை மட்டுமே சந்திக்க வைத்துவிட்டு ஒட்டுமொத்த ஆட்டத்தை தன்னுடைய தோளில் சுமந்தார் ஸ்டோக்ஸ். லீச் ஒரு ரன்கள் மட்டுமே எடுக்க மீதமுள்ள 72 ரன்களையும் அவரை அடித்து ஆட்டத்தை வெற்றி பெறவைத்தார். 135 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர், 8 சிக்ஸர்கள் விளாசியிருந்தார்.

டெஸ்ட் போட்டியை ரசித்து பார்ப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஆட்டம் அவ்வளவு விறுவிறுப்பாக இருக்காது என்பதால் பெரும்பாலும் யாரும் அமர்ந்து பார்ப்பதில்லை. ஆனால், தன்னைய மேஜிக்கான ஆட்டத்தால் ரசிகர்களை டெஸ்ட் போட்டியை ரசிக்க வைத்துவிட்டார் ஸ்டோக்ஸ்.  

உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியிலே தன்னுடைய அசத்தலான திறமையால் இங்கிலாந்து அணிக்கு வெற்றியை பெற்றுத் தந்தார். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சூப்பர் ஓவர் வரை அவர் நிகழ்த்திய போராட்டமே இன்றும் மறக்க முடியாமல் உள்ளது. அந்த வகையில் டெஸ்ட் போட்டி ஒன்றில் மறக்க முடியத ஒரு ஆட்டத்தை பென் ஸ்டோக் நிகழ்த்தியுள்ளார்.