விளையாட்டு

மைதானத்திற்குள் படையெடுத்த தேனீக்கள் : பதுங்கிய வீரர்கள்

webteam

உலகக்கோப்பை தொடரில் தென்னாப்ரிக்கா-இலங்கை இடையிலான போட்டியின் போது மைதானத்திற்குள் திடீரென தேனீக்கள் படையெடுத்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

உலகக் கோப்பை தொடரின் 35வது லீக் போட்டி இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே பிரிட்டனில் உள்ள ரிவர்சைட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங்கை தொடங்கிய இலங்கை அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 203 ரன்களில் சுருண்டனர். தற்போது இலக்கை எதிர்த்து தென்னாப்பிரிக்க அணி விளையாடி வருகிறது.

முன்னதாக, இலங்கை அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, திடீரென தேனீக்கள் கூட்டமாக மைதானத்திற்குள் படையெடுத்தன. இதனால் பயந்துபோன வீரர்கள் தேனீக்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ள தரையோடு தரையாக படுத்துக்கொண்டனர். கள நடுவர்களும் மைதானத்தில் தரையோடு தரையாக படுத்தனர். தேனீக்கள் தென்னாப்பிரிக்க கீப்பர் டி காக் அருகாமையில் நகர்ந்தன. அழையா விருந்தாளிகளாக வந்த தேனீக்கள் மைதானத்தில் இருந்து வெளியேறியதும் போட்டி தொடர்ந்தது.