BCCI
BCCI @BCCIWomen
விளையாட்டு

“இனி தற்காலிக பணி நியமனம் இல்லை” - இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் புதிய மாற்றம்

Justindurai S

இந்திய கிரிக்கெட் அணிகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ நிர்வகித்து வருகிறது. பிசிசிஐ சட்டத்திட்டங்களின் படி, தலைமை பயிற்சியாளரை பிசிசிஐ ஆலோசனைக் குழுவே தேர்வு செய்கிறது. அதன்படி பேட்டிங், பீல்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகியவற்றுக்கான பயிற்சியாளர்களை தேர்வாளர்கள் குழு நியமனம் செய்கிறது.

BCCI

இந்த நடைமுறை இந்திய ஆடவர் அணியில் முறையாக பின்பற்றப்பட்டு வரும் சூழலில், இந்திய மகளிர் அணியில் சரிவர பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்துவந்தது. இவ்விஷயத்தில், தற்காலிக ஏற்பாடாக தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருந்து பயிற்சியாளர்களை நியமித்து இந்திய பெண்கள் அணியை நிர்வகித்து வந்தது பிசிசிஐ.

குற்றச்சாட்டு வலுத்த நிலையில் தற்போது இந்திய மகளிர் அணிக்கு நிலையான பயிற்சியாளர்களை உருவாக்கும் பொருட்டு புதிய மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது பிசிசிஐ. அதன்படி, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் பயிற்சியாளர்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நியமிக்காமல் நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. நேற்று நடந்த மெய்நிகர் அபெக்ஸ் கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

BCCI

பிசிசிஐ வட்டாரம் தரப்பில் இதுகுறித்து "இந்திய மகளிர் அணியில் இனி தற்காலிக நியமனங்கள் இருக்காது. அனைத்து பயிற்சியாளர்களுக்கும் நீண்ட கால ஒப்பந்தம் வழங்கப்படும். இது அணிக்கு தேவையான ஸ்திரத்தன்மையை அளிக்கும்" என்று தெரிவித்துள்ளது.

இந்திய பெண்கள் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ரமேஷ் பவார் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதன்பின் இந்திய பெண்கள் அணி தலைமைப் பயிற்சியாளர் இல்லாமலேயே போட்டிகளில் ஆடிவருகிறது. அண்மையில் நடந்த டி20 பெண்கள் உலகக் கோப்பை தொடரில்கூட தலைமைப் பயிற்சியாளர் இல்லாமலேயே இந்திய அணி பங்கேற்று வந்தது குறிப்பிடத்தக்கது.