ஐக்கிய அரபு அமீரகத்தில் 2021 டி20 உலக கோப்பை தொடர் நடத்தப்படும் என இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். இந்தியாவில் நிலவும் கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் இன்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியும் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
இந்த தொடரை எப்போது நடத்துவது என்ற முடிவை ஐசிசி எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார். உத்தேசமாக அக்டோபர் முதல் நவம்பருக்குள் உலக கோப்பை தொடர் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக ஐபிஎல் 2021 சீசனில் விடுபட்டுள்ள போட்டிகளையும் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
உலக கோப்பை தொடரை அமீரகத்தில் நடைபெற்றாலும் இந்த தொடரை ஹோஸ்ட் செய்வது இந்தியாதான் என ஐசிசி முன்னதாக அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. அதனால் இந்திய கிரிக்கெட் அணி தொடரை நடத்தும் அணியாக களம் இறங்குகிறது.