விளையாட்டு

மகளிருக்கும் ஐபிஎல் நடத்துங்கப்பா..! - மைக்கல் வாகன் அட்வைஸ்க்கு பதிலடி கொடுத்த கங்குலி!

சங்கீதா

இந்தியாவில் வரும் 2023-ம் ஆண்டு முதல், மகளிர் ஐ.பி.எல். (WIPL) தொடர் துவங்க வாய்ப்புள்ளதாக, பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி இன்று தெரிவித்துள்ளார்.

உலகளவில் கிரிக்கெட் போட்டிகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது என்றால், அது உள்ளூர் கிரிக்கெட் போட்டியான ஐ.பி.எல். எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் என்றே சொல்லலாம். ஏனெனில், இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதன்முதலில் ஐ.பி.எல். போட்டி தொடங்கப்பட்டது. இந்தப் போட்டியில் 20 ஓவர்களில், அதாவது குறைந்த நேரத்தில் அதிக சுவாரஸ்யத்தை கொடுக்கும் வகையில் இருந்ததால், இந்தப் போட்டி கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது.

மேலும் இந்த ஐ.பி.எல். போட்டி உலகம் முழுவதும் பல்வேறு டி20 லீக்குகள் தொடங்குவதற்கு முன்னோடியாக இருந்தது. அதன்படி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, வங்கதேசம் போன்ற அணிகள், தங்களது நாட்டில் டி20 லீக்குகளை தொடங்கின. அதிலும், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் ஒருபடி மேலேபோய், மகளிர் பிக் பாஷ் லீக் (பி.பி.எல்.) எனப்படும் மகளிர் டி20 லீக்குகளை நடத்த ஆரம்பித்தன. இத்தகைய லீக்குகள் மிகுந்த வரவேற்பு பெற்று, மகளிர் கிரிக்கெட்டை உலகளவில் பிரபலப்படுத்துவதற்கு வழிவகுத்தது.

இதையடுத்து இந்தியாவிலும் மகளிர் ஐ.பி.எல். போட்டிகளை துவங்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழ ஆரம்பித்தன. இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகன் கூட, மகளிர் ஐ.பி.எல். போட்டிக்கு முன்னுரிமை தர வேண்டும் என்று பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலியை ட்விட்டரில் வலியுறுத்தி இருந்தார். 

இந்நிலையில், பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி, மகளிர் கிரிக்கெட்டிலும் ஐ.பி.எல். லீக் நடத்துவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், “மகளிர் ஐ.பி.எல். போட்டிகளை நடத்துவதற்கான பணிகளை தொடங்கியுள்ளோம். மகளிர் ஐ.பி.எல். போட்டியை அடுத்த வருடம் துவங்குவது சரியாக இருக்கும். நிச்சயமாக இதுவும் ஐ.பி.எல். போட்டியைப் போன்றே மிகப்பெரிய வெற்றியை அடையும்” என்று கூறியுள்ளார்.