விளையாட்டு

"என்னால் பிசிசிஐ மகிழ்ச்சியாக இல்லை" சஞ்சய் மஞ்ச்ரேக்கர் !

"என்னால் பிசிசிஐ மகிழ்ச்சியாக இல்லை" சஞ்சய் மஞ்ச்ரேக்கர் !

jagadeesh

என்னுடைய சமீபத்திய கருத்துகளால் பிசிசிஐ மகிழ்ச்சியாக இல்லை என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் பிரபல வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் போட்டிக்கான வர்ணனையாளர்கள் குழுவில் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இடம் பெறவில்லை. ஆனால், குழுவில் சுனில் கவாஸ்கர், சிவராமகிருஷ்ணன், முரளி கார்த்திக் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். அதனால், சஞ்சய் மஞ்ச்ரேக்கரை வர்ணனையாளர் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இருப்பினும், அவர் ஏன் நீக்கப்பட்டார் என்பதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. ஆனால், அவரின் நடவடிக்கையால் பிசிசிஐ கடும் அதிருப்தியடைந்ததாக கூறப்பட்டது.

பிசிசிஐ வர்ணனைக் குழுவில் இருந்து மஞ்ச்ரேக்கர் நீக்கப்பட்டதால் அடுத்ததாக ஐபிஎல் போட்டிக்கும் அவர் தேர்வாகமாட்டார் என்றும் கூறப்படுகிறது. சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் வர்ணனை குறித்து சமீபகாலமாகப் பலரும் விமர்சனங்களைத் தெரிவித்து வருகிறார்கள். அவர் ஒரு சார்பு நிலையுடன் பேசுவதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டினர். ஐபிஎல் போட்டியின்போது மும்பைக்கு ஆதரவாகப் பேசுகிறார் என்கிற விமர்சனங்களும் சஞ்சய் மீது அதிகமாக எழுந்தன. இதுமல்லாமல் அண்மையில் சக வர்ணனையாளரான ஹர்ஷா போக்ளேவை மட்டம் தட்டியும் பேசினார்.

சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வர்ணனையாளர் குழுவில் இருந்து நீக்கப்பட்டது குறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்காத நிலையில். மஞ்ச்ரேக்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து விளக்கமளித்துள்ளார் அதில் "நான் எப்போதும் வர்ணனையாளர் என்ற பணியை பெருமையாகவே கருதுகிறேன். ஒருபோதும் அது உரிமையாக நான் நினைத்தது இல்லை. என்னை குழுவில் வைத்திருப்பதா வேண்டாமா என்பது பிசிசிஐ முடிவு. அதை நான் எப்போதும் மதிக்கிறேன். பிசிசிஐ என்னுடைய சமீபத்திய கருத்துகள், வர்ணனை காரணமாக மகிழ்ச்சியாக இல்லாமல் இருந்திருக்கலாம். நான் அதை முழுமனதோடு ஏற்றுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.