விளையாட்டு

செப்டம்பரில் மினி ஐபிஎல்... பிசிசிஐ புதிய திட்டம்!

webteam

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மினி ஐபிஎல் தொடரை நடத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். 
உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ஐபிஎல் தொடரில் 8 அணிகள் பங்கேற்று வருகின்றன. இதில் வெற்றிபெறும் அணிகள் ஆண்டுதோறும் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்பதுண்டு. ஆனால், அந்த தொடர் தற்போது நடத்தப்படுவதில்லை என்பதால், செப்டம்பர் மாதம் 15 நாட்கள் இடைவெளி கிடைத்துள்ளது. இந்த காலஅவகாசத்தில் மினி ஐபிஎல் தொடரை நடத்துவது குறித்து பிசிசிஐ நிர்வாகம் ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா, இந்த தகவலைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், சாம்பியன்ஸ் கோப்பை டி20 தொடர் நடத்தப்படுவதில்லை என்பதால், அந்த நேரத்தில் வெளிநாடுகளில் மினி ஐபிஎல் தொடரை நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். மினி ஐபிஎல் தொடரை நடத்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பொருத்தமான இடமாக தோன்றுவதாகவும் சுக்லா தெரிவித்துள்ளார். கடந்தாண்டும் இதேபோல மினி ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டது. பல்வேறு காரணங்களால் அந்த திட்டத்தை பிசிசிஐ கடைசி நேரத்தில் கைவிட்டது.