இந்திய கேப்டன் விராட் கோலியை பொறுமையை கடைபிடிக்குமாறு பிசிசிஐ அதிகாரி ஒருவர் அறிவுரை கூறியதாக பரவிய செய்தி பொய் என பிசிசிஐ விளக்கமளித்துள்ளது.
இந்திய கேப்டன் விராட் கோலியின் கோபங்கள் அவ்வப்போது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடருக்கு முன்பு, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவுடன் இந்திய அணி விளையாடிய போது, செய்தியாளர்களிடம் கோலி சற்று கடினமாக பேசியிருந்தார். இந்த விவகாரம் அவருக்கு எதிரான சர்ச்சையை கிளப்பியது. இதைத்தொடர்ந்து அண்மையில், இந்திய வீரர்களின் பேட்டிங்கை விட வெளிநாட்டு வீரர்கள் பேட்டிங்கை ரசிப்பதாக ஒரு கிரிக்கெட் ரசிகர் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
பிறந்த நாள் அன்று அந்த ட்வீட்டை கண்ட கோலி, இந்திய பேட்ஸ்மேன்களின் விளையாட்டை பிடிக்காதவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என கோபமாக தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்புகளும், விமர்சனங்களும் கிளம்ப, தான் அந்த கருத்தை எதிர்க்கவில்லை என்றும், இந்திய பேட்ஸ்மேன்களை இழிவுபடுத்தியதை மட்டுமே தான் எதிர்த்ததாகவும் கோலி விளக்கமளித்திருந்தார். கோலியின் அந்த கருத்துக்கு பிசிசிஐ அப்போது அதிருப்தி தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ரசிகர்கள், எதிரணி வீரர்கள் மற்றும் செய்தியாளர்களிடையே பொறுமையாகவும், பணிவுடனும் நடந்துகொள்ள வேண்டும் என, விராட் கோலிக்கு பிசிசிஐ உயர் அதிகாரி ஒருவர் அறிவுரை வழங்கியதா நேற்று செய்தி பரவியது. இந்த செய்தி தொடர்பாக விளக்கமளித்துள்ள பிசிசிஐ, அந்த தகவல் பொய்யானது என தெரிவித்துள்ளது. மேலும் கோலிக்கு அறிவுரை வழங்கியதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை என்றும், போலியான் தகவலை நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.