மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்கு எதிரான முக்கியத்துவம் மிகுந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று, இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. டெர்பி நகரில் நடைபெற்ற போட்டியில் 186 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி சிறப்பான வெற்றியை ருசித்தது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடி சதம் விளாசிய கேப்டன் மிதாலி ராஜ் 109 ரன்கள் குவித்தார். ஹர்மன்பீரித் 60 ரன்கள் எடுத்தார். கடைசிகட்டத்தில் அதிரடியாக விளையாடிய வேதா கிருஷ்ணாமூர்த்தி 45 பந்துகளில் 70 ரன்கள் விளாசினார். கேஸ்பரக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
266 என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரன் குவிக்கத் திணறியது. அந்த அணி 26 ஒவரிலேயே 79 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக சேட்டர்த்வெயிட் 26 ரன்கள் எடுத்தார். சிறப்பாக பந்துவீசிய ராஜேஸ்வரி கெய்க்வாட் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
வரும் 20-ந்தேதி நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடுகிறது.