பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் மொசாடெக் ஹொசைன் சைகட் மீது அவரது மனைவி வரதட்சனை புகார் கூறியுள்ளார். வரதட்சனை கேட்டு கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பங்களாதேஷை சேர்ந்த கிரிக்கெட் வீரர் மொசாடெக் ஹொசைன் சைகட். கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் தர மற்றும் ஏ அணியில் பங்கேற்ற அவர் 2016-ஆம் ஆண்டு முதல் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வருகிறார். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஆசியக் கோப்பையில் பங்கேற்கும் பங்களாதேஷ் அணியிலும் ஹொசைன் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில் ஹொசைன் மீது அவரது மனைவி வரதட்சனை புகார் கூறியுள்ளார்.
ஹொசைன் சைகட்டிற்கும் அவரது உறவினரான ஷர்மின் சமீரா உஷாவிற்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தனது கணவர் தன்னை வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும், இல்லையென்றால் வீட்டை விட்டு வெளியே செல் என கூறுவதாகவும் புகார் கூறியிருக்கிறார். 12,000 டாலர் வரதட்சனையாக கொண்டு வரும்படி ஹொசைன் கேட்பதாகவும் உஷா குற்றஞ்சாட்டியுள்ளார். இருப்பினும் இந்த விஷயத்தில் ஹொசைன் இன்னும் எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. அதேசமயம் திருமணம் ஆன முதலில் இருந்தே இருவருக்கும் சரியான புரிந்துணர்வு இல்லை என ஹொசைனின் சகோதரர் கூறியுள்ளார். உஷாவின் புகார் விரைவில் விசாரிக்கப்படும் எனத் தெரிகிறது.