ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள், தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
முதல் தர கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரர்கள், சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் ஊதியத்தை உயர்த்தித் தருவது, மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கும் சமமான ஊதியம் வழங்குவது உட்பட 11 கோரிக்கைகளை வலியுறுத்தி, பங்களாதேஷ் கிரிக்கெட் வீர்ர்கள் கடந்த திங்கட்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்நாட்டு அணியின் டெஸ்ட் மற்றும் டி-20 கேப்டன் ஷகிப் அல்-ஹசன், மக்முதுல்லா, முஷ்பிகுர் ரஹிம் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இதை அறிவித்திருந்தனர்.
பங்களாதேஷ் அணி, அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாட முடிவு செய்துள்ளது. வீரர்களின் போராட்டத்தால், அந்த அணி இந்தியாவிற்கு வந்து விளையாடுமா? என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் தங்கள் கோரிக்கைகளில் இரண்டை தவிர மற்றவை ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டதால், போராட்டத்தை அவர்கள் வாபஸ் பெற்றுள்ளனர்.
இதுபற்றி ஷகிப் அல் ஹசன் கூறும்போது, ’எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) உறுதி கொடுத்திருக்கிறது. இதையடுத்து முதல் தர கிரிக்கெட் வீரர்கள் சனிக்கிழமை முதல் மீண்டும் விளையாடுவார்கள். இந்திய தொடருக்கானப் பயிற்சியிலும் வீர்ர்கள் பங்குபெறுவார்கள்’ என்றார்.
கொல்கத்தாவில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியை காண, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா வருகிறார். பிரதமர் மோடிக்கும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது.