மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி கடைசி பந்து வரை போராடி தோற்றது.
2019 ஐபிஎல் தொடரின் 7வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையே நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியின் தொடக்க வீரர்கள் ஆரம்பத்திலேயே ரன்களை குவித்தனர். 23 (20) ரன்கள் எடுத்த நிலையில் சாஹல் வீசிய சுழலில் குயிண்டான் டி காக் விக்கெட்டை இழந்தார்.
அதைத்தொடர்ந்து ரோகித் ஷர்மா 48 (33) மற்றும் சுர்யகுமார் யாதவ் 38 (24) மற்றும் யுவராஜ் சிங் 23 (12) ரன்கள் எடுத்து அவுட் ஆகினர். யுவராஜ் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்தபோது, அரங்கம் அதிர்ந்தது. பின்னர், வந்த ஹர்திக் பாண்ட்யா 14 பந்துகளில் அதிரடியாக 32 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது. பெங்களூர் அணியில் சிறப்பாக பந்துவீசிய சாஹல் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இதையடுத்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய பெங்களூர் அணி, தொடக்கத்திலேயே மொயின் அலி விக்கெட்டை 13 (7) ரன்களில் இழந்தது. ஆனால், தொடக்க ஆட்டக்காரர் பார்திவ் படேல் மற்றும் கேப்டன் கோலி ஆகியோர் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 31 (22) ரன்களில் பார்திவ் படெல் நடையை கட்ட, 46 (32) ரன்களில் கோலி அவுட் ஆனார்.
பின்னர், வந்த ஏபி டி வில்லியர்ஸ் இறுதிவரை அவுட் ஆகாமல் வெற்றிக்கு போராடினார். ஆனால் கடைசி இரண்டு ஓவர்களில் 22 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பும்ரா மற்றும் மலிங்கா சிறப்பாக பந்துவீசி மும்பை அணியை வெற்றி பெறச் செய்தனர். இதனால், மும்பை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.