கொல்கத்தா அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் ஏபி டிவில்லியர்ஸின் அதிரடி ஆட்டம் காரணமாக பெங்களூர் அணி 194 ரன்கள் குவித்தது.
ஐபிஎல் தொடரின் 28வது லீக் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஆரோன் ஃபின்ச் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
23 பந்துகளில் 32 ரன்கள் எடுத்த நிலையில், படிக்கல் விக்கெட்டை இழக்க, 47 (37) ரன்கள் எடுத்திருந்தபோது அவுட் ஆகி ஃபின்ச் அரை சதத்தை தவறவிட்டார். அதன்பின்னர் ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் டி வில்லியர்ஸ் அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தினர். கொல்கத்தா பவுலர்களின் பந்துவீச்சை பறக்கவிட்ட டி வில்லியர்ஸ் 23 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார்.
20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ரன்கள் குவித்தது. இறுதிவரை ஆட்டமிழக்காத டி வில்லியர்ஸ் 73 (33) ரன்களும், விராட் கோலி 33 (28) ரன்களும் குவித்தனர். கொல்கத்தா அணியில் ரஸல் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.