விளையாட்டு

விளையாடிக் கொண்டிருந்தபோதே திடீரென மயங்கி விழுந்து பேட்மிண்டன் வீரர் உயிரிழப்பு

webteam

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு வீரர் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

சமீபகாலமாக சில வீரர்கள், போட்டிகளின் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவருகின்றனர். இந்த வகையில், கடந்த சில நாட்களாக கபடி வீரர்கள் சிலர் உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில், ஹைதராபாத் லால்பேட் பகுதியில் உள்ள பேராசிரியர் ஜெய்சங்கர் உள்விளையாட்டு அரங்கத்தில் 38 வயது இளைஞரான ஷியாம் யாதவ், நேற்று இரவு 7.20 மணியளவில் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்த காந்தி மருத்துவமனைக்கு கொண்டு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

தினந்தோறும் அலுவலகம் முடித்து வீட்டிற்கு வரும் வழியில் பேட்மிண்டன் விளையாடிவிட்டு வருவதை, ஷியாம் யாதவ் வாடிக்கையாக கொண்டுள்ளார். அப்படித்தான் அவர் நேற்றும் விளையாடச் சென்றுள்ளார். ஆனால், எதிர்பாராத விதமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த வீடியோவை உமா சுதிர் என்பவர், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஓமன் நாட்டில் உள்ள மஸ்கட் போட்டியின் இடையே பேட்மிண்டன் மைதானத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் மாரடைப்பால் இறந்து போனார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த நபர், போட்டியின்போது திடீரென சரிந்து விழுந்து இறந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. அதுபோல், கடந்த வாரத்தில், ஹைதராபாத்தில் இருந்து சுமார் 200 கிமீ தொலைவில் உள்ள நிர்மல் மாவட்டத்தின் பார்டி கிராமத்தில் உறவினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடிய 19 வயது இளைஞர் ஒருவர் சரிந்து விழுந்தார். பின்னர் அந்த இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த சம்பவமும் கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

- ஜெ.பிரகாஷ்