விளையாட்டு

பிக்பேஷ் லீக் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த பேட்ஸ்மேன்: வரலாறு படைத்த மேக்ஸ்வெல்!

EllusamyKarthik

ஆஸ்திரேலிய நாட்டில் நடத்தப்பட்டது வரும் பிரபல கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான பிக்பேஷ் லீக் தொடரில் வரலாற்று சிறப்புமிக்க சாதனையை படைத்துள்ளார் ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டர் மேக்ஸ்வெல். மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டனாக பிக்பேஷ் லீக்கில் விளையாடி வரும் அவர் 64 பந்துகளில் 154 ரன்களை குவித்தார். 

அதன் மூலம் இந்த சாதனையை அவர் எட்டியுள்ளார். 2019-20 சீசனில் ஸ்டாய்னிஸ் ஒரே இன்னிங்ஸில் 148 ரன்களை எடுத்திருந்தார். அதுவே இதுநாள் வரையில் அதிகபட்ச ரன்களாக இருந்தது. தற்போது அதனை மேக்ஸ்வெல் முறியடித்துள்ளார். 

 

ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு எதிராக அவர் எதிர்கொண்ட முதல் 20 பந்துகளில் அரை சதம் விளாசினார். 41 பந்துகளில் சதமும், 62 பந்துகளில் 150 ரன்களும் எடுத்திருந்தார்.

ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மெல்பேர்ன் ஸ்டார்ஸ் இரண்டு விக்கெட் மட்டுமே இழந்து 273 ரன்கள் குவித்தது. மேக்ஸ்வெல் 64 பந்துகளில் 154 ரன்களும், ஸ்டொய்னிஸ் 31 பந்துகளில் 75 ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பின்னர் விளையாடிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்து 106 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.