கொரோனா பரவல் காரணமாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பயிற்சி போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கும் வீரா்கள், கொரோனா தடுப்பு தனிமை முகாமில் இருந்த ஹோட்டலில் 26 வயது ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடா்ந்து பயிற்சிப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டு, வீரா்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வரும் 8-ஆம் தேதி தொடங்குகிறது.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் களமிறங்குவதற்கு முன்னதாக டென்னிஸ் வீரா்கள் ஹோட்டல் ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பு தனிமை முகாமில் 14 நாள்கள் தங்கியிருந்தனா். 14 நாள்களை நிறைவு செய்த பின்னர், வீரா்கள் பயிற்சிப் போட்டியில் விளையாடி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட ஹோட்டலில் உள்ள ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அந்த ஹோட்டலில் தனிமை முகாமில் இருந்த டென்னிஸ் வீரா்களையும் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே தனிமை முகாமில் இருந்து வெளியே வரலாம் என எச்சரிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த அனைத்துப் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டதோடு, போட்டியில் பங்கேற்க வந்திருந்த வீரர்கள், பயிற்சியாளா்கள் என 520 பேரை தனிமைப்படுத்திக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.