பந்தை சேதப்படுத்திய விவகாரம், ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரிய தலைக்குனிவு என்று அந்நாட்டு பிரதமர் மால்கம் டர்புல் (Malcolm Turnbull) தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த இரு அணிக ளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, கேப்டவுணில் நடந்து வருகிறது. நேற்று முன்றாம் நாள் ஆட்டத்தின் போது ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் கேமருன் பேன்கிராஃப்ட், மற்றும் கேப்டன் ஸ்மித் ஆகியோர் மஞ்சள் டேப் மூலம் பந்தை சேதப்படுத்தியது கேமரா மூலம் தெரியவந்தது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பேன்கிராஃப்ட், தனது தவறை ஒப்புக்கொண்டார். அணியில் உள்ள முக்கிய வீரர்கள் சிலர் திட்டமிட்டே இந்தச் செயலில் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார். இந்த தவறு தமக்கு தெரிந்தே நடந்ததாகக் கூறிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் இனி தமது தலைமையில் இதுபோன்ற சம்பவம் தொடராது எனக் கூறினார்.
இதனிடையே இந்த செயலுக்கு, சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். சிலர் கேப்டன் ஸ்மித் கேப்டன் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரம் ஆஸ்திரேலியாவிலும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
இந்நிலையில் அந்நாட்டு பிரதமர் மால்கம் டர்புல் கூறும்போது, ‘ தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்த தகவல் அதிர்ச்சி யாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு பெரும் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவருமே, இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டிருப்பார்கள் என்ற அவப்பெயர் கிடைத்துள்ளது. இது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் சேர்மன் டேவிட் பீவரிடம் பேசினேன். எனது ஏமாற்றத்தைக் கூறினேன். இது தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளேன்’ என்றார்.
அந்நாட்டு அரசு, ஸ்மித்தை உடனடியாக கேப்டன் பொறுப்பில் இருக்க விடுவிக்கவும் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.