விளையாட்டு

6வது முறை சாம்பியன்! மகத்தான சாதனை படைத்தது ஆஸ்திரேலிய மகளிர் அணி!

webteam

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற 8வது மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்த முறையும் ஆஸ்திரேலியா கைப்பற்றி மகத்தான சாதனை படைத்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் 8வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இரு பிரிவுகளாக 10 அணிகள் பங்கேற்றன. லீக் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்கள் பிடித்த அணிகள் அரையிறுதியில் பலப்பரீட்சை நடத்தின. அதன்படி, முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி, இந்த தொடரில் எதிலும் தோல்வியைச் சந்திக்காது முதல் அணியாக, 8வது முறையாக உலகக்கோப்பை இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றது. இரண்டாவது அரையிறுதியில் வலுவான இங்கிலாந்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இவ்விரு அணிகளுக்கான இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. அதன்படி களமிறங்கிய தொடக்க பேட்டரான ஹீலே 18 ரன்களில் வெளியேறினாலும், பேத் மூனி வலுவாக இறுதிவரை அட்டமிழக்காமல் இருந்து தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். அவர் 53 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார். இதில் 9 பவுண்டரிகளும் 1 சிக்ஸரும் அடக்கம். இவருக்குத் துணையாய் கார்ட்னர் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் அந்த அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்க அணியில் இஸ்மாயில் மற்றும் காப் ஆகியோர் தலா 2 விக்கெட்களை எடுத்தனர்.

பின்னர் கடினமான இலக்கைக் கொண்டு ஆடிய தென் ஆப்பிரிக்க அணி, ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் பரிதவித்தது. தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க பேட்டர் வால்வார்டிட் 48 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தபோதும், மற்ற வீரர்கள் கடினமான இலக்கில் பதற்றத்தால் சொற்ப ரன்களிலேயே வெளியேறினர். இறுதியில் அந்த அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 137 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று மீண்டும் உலகக்கோப்பையை, அதுவும் 2வது முறையாக ஹாட்ரிக் முறையில் உச்சி முகர்ந்துள்ளது. ஏற்கெனவே அந்த அணி, 2010, 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் ஹாட்ரிக் முறையில் உலகக்கோப்பையில் வென்றிருந்தது.

பின்னர், 2016ஆம் அந்த அணி வெஸ்ட் இண்டீஸிடம் உலகக் கோப்பையை இழந்தபோதும், மீண்டும் எழுச்சி பெற்று 2018, 2020 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து கோப்பையை வென்றிருந்தது. இந்த முறையும் கோப்பையை வென்றதன் மூலம் டி20 உலகக் கோப்பை பட்டியலில் இரண்டு முறை ஹாட்ரிக் முறையிலும், 6 முறை வென்ற அணியாகவும் மகத்தான சாதனையை ஆஸ்திரேலியா படைத்துள்ளது. இதுவரை எந்த உலகக்கோப்பையும் (ஆடவர் மற்றும் மகளிர்) வெல்லாத அணியாக வலம் வரும் தென் ஆப்பிரிக்கா இந்த முறை உலகக்கோப்பை இறுதிச் சுற்றில் நுழைந்ததையே பெரும் கெளரவமாகக் கருதி மகிழ்கின்றனர்.

- ஜெ.பிரகாஷ்