விளையாட்டு

மகளிர் உலகக்கோப்பை: சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

JustinDurai

பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிப் பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

நியூசிலாந்தில் இன்று நடந்த பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் மெக் லானிங் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும், ஹீதர் நைட் தலைமையிலான நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்கியது.

அணியின் தொடக்க வீராங்கனைகளாக அலிக்சா ஹீலியும், ராகேல் ஹெய்னசும் களமிறங்கினர். இருவரும் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டனர். ராகேல் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அலிக்சா ஹீலி சதம் அடித்து அசத்தினார். அவர் 138 பந்துகளில் 170 ரன்கள் குவித்தார். இதில் 26 பவுண்டரிகள் அடங்கும். பெத் மூனி 62 ரன்கள் எடுத்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் குவித்தது.


இதையடுத்து 357 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 43.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 285 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. ஒற்றை வீராங்கனையாக போராடிய நடாலி ஸ்கிவர் மட்டும் 148 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் 71 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிப்பெற்று, சாம்பியன் பட்டத்தை வென்றது. 7-வது முறையாக  சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறது ஆஸ்திரேலிய அணி.