விளையாட்டு

டி20 போட்டிகளில் இருந்தும் ஓய்வு - ஆரோன் பிஞ்ச் திடீர் அறிவிப்பு

JustinDurai

ஆஸ்திரேலிய டி20 அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா அணி ஒருநாள் உலகக்கோப்பை (2015) மற்றும் டி20 உலகக்கோப்பை (2021) வென்ற போது அணியில் அங்கம் வகித்தவர் ஆரோன் பிஞ்ச். கடந்த ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு தகுதி பெறாமல் லீக் சுற்றுடன் வெளியேறியதால் கடும் விமர்சனத்துக்கு ஆளானார் ஆரோன் பிஞ்ச்.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென்று அறிவித்திருக்கிறார் ஆரோன் பிஞ்ச். ஏற்கனவே ஒருநாள், டெஸ்ட் அணிகளில் இருந்து ஓய்வுபெற்ற ஆரோன் பிஞ்ச் தற்போது டி20 போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  

இதுகுறித்து ஆரோன் பிஞ்ச் கூறுகையில், ''அடுத்த டி20 உலகக் கோப்பை வரை நான் விளையாட மாட்டேன் என்பதை உணர்ந்து, எனது இடத்தை நிரப்புவதற்கு அணிக்கு போதிய காலம் கொடுக்க வேண்டும் என்பதற்காக இப்போதே விடைபெறுகிறேன்.  12 ஆண்டுகளாக அணிக்காக ரத்தம் சிந்தி விளையாடி உழைத்ததற்காக பெருமைப்படுகிறேன்.  இப்போது நான் நல்ல இடத்தில் இருப்பதாக நினைக்கிறேன்" என்று ஃபின்ச் கூறினார்.

கடந்த 2011ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச அரங்கில் அறிமுகமான ஆரோன் பிஞ்ச், இதுவரை 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 278 ரன்னும், 146 ஒருநாள் போட்டிகளில் ஆடி 5,406 ரன்னும், 103 டி20 போட்டிகளில் ஆடி 3,120 ரன்னும் அடித்துள்ளார். இவர் மேலும் 92 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 2091 ரன்கள் அடித்துள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் ( 172 ரன்) அடித்தவர் என்ற உலக சாதனைக்கு சொந்தக்காரர் பின்ச்  என்பது குறிப்பிடத்தக்கது