இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்பேர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1 - 0 என முன்னிலை வகிக்கிறது. கேப்டன் கோலி இல்லாத நிலையில் இந்திய அணியை ரஹானே வழிநடத்துகிறார். இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அந்த அணிக்காக ஜோ பேர்ன்ஸ் மற்றும் மேத்யூ வேட் இன்னிங்க்ஸை ஓப்பன் செய்தனர். பும்ரா வீசிய ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரின் இரண்டாவது பந்திலேயே பேர்ன்ஸ் 10 பந்துகளை சந்தித்த நிலையில் டக் அவுட்டானார். அஷ்வின் வீசிய 13 வது ஓவரில் மேத்யூ வேட் 30 ரன்களுக்கு அவுட்டானார். தொடர்ந்து ஸ்மித்தும் அஷ்வின் வீசிய அடுத்த ஓவரிலேயே டக் அவுட்டானார்.
38 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் மார்னஸ் லபுஷேனும், டிராவிஸ் ஹெட்டும் 86 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ரவுண்ட் தி விக்கெட்டாக பும்ரா வீசிய 42வது ஓவரில் ஹெட் 38 ரன்களுக்கு அவுட்சைட் எட்ஜாகி ஆட்டமிழந்தார். தொடர்ந்து அறிமுக வீரர் சிராஜ் வீசிய 50வது ஓவரில் 48 ரன்களை குவித்திருந்த லபுஷேனும் அவுட்டானார். இது சிராஜின் முதல் டெஸ்ட் விக்கெட் என்பதும் குறிப்பிடத்தக்கது.
50 ஓவர் முடிவில் 134 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்து தடுமாறி வருகிறது ஆஸ்திரேலியா. தற்போது அந்த அணியின் கேப்டன் டிம் பெய்ன் மற்றும் கேமரூன் கிரீன் விளையாடி வருகின்றனர். அஷ்வின் மற்றும் பும்ரா தல இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். முதல் நாளில் இந்தியாவின் கை ஓங்கி உள்ளது.