ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 237 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து, இரண்டு டி20 போட்டி, 5 ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றிவிட்டது. இப்போது ஒருநாள் போட்டித் தொடர் நடக்கிறது. முதலாவது ஒரு நாள் போட்டி ஐதராபாத்தில் இன்று தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் பின்ச் மற்றும் கவாஜா களமிறங்கினர். ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் பும்ரா ஆரோன் பின்ச் விக்கெட்டை சாய்த்தார். அதன் பிறகு ஜோடி சேர்ந்த கவாஜாவும் ஸ்டோயினிஸ் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய கவாஜா 50 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஸ்டோயினிஸ் 37 ரன்கள் குவித்து விக்கெட்டை பறிக்கொடுத்தார். பின்னர் வந்த வீரர்களில் மேக்ஸ்வெல் மட்டும் பொறுப்புடன் விளையாடி 40 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் அலெக்ஸ் கேரி அதிரடி காட்ட ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 236 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலியா தரப்பில் கவாஜா 50 ரன்கள், மேக்ஸ்வெல் 40 ரன்கள், ஸ்டோயினிஸ் மற்றும் கேரி 37 ரன்கள் எடுத்தனர். இந்திய தரப்பில் முகமது ஷமி, பும்ரா, குல்தீப் யாதவ் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி தலா இரண்டு விக்கெட்டுகளை சாய்த்தனர். இதனையடுத்து 237 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.