விளையாட்டு

இந்தியாவை பழி தீர்த்த ஆஸ்திரேலியா: இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் வெற்றி!

EllusamyKarthik

கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரண்டு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற மூன்று  போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

இந்நிலையில் இன்று (29/11/20) நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. 

அந்த அணியின் பேட்டிங் லைன் அப்பில் இடம் பிடித்துள்ள வார்னர், ஃபின்ச், ஸ்மித், மார்னஸ் லபுஷேன், மேக்ஸ்வெல் என ஐவரும் 50 ரன்களுக்கு மேல் எடுத்திருந்தனர். இதில் ஸ்மித் 64 பந்துகளில் 104 ரன்களை எடுத்திருந்தார். 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 389 ரன்களை குவித்தது ஆஸ்திரேலியா. 

தொடர்ந்து விளையாடிய இந்தியாவுக்காக மயங்க் அகர்வாலும், தவானும் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். 58 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் தவான் விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து மயங்க் அகர்வாலும் அவுட்டானார். 

கோலியும், ஷ்ரேயஸும் 93 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஷ்ரேயஸ் 38 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து களம் இறங்கிய ராகுலுடன் இணைந்து 72 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் கோலி. இருப்பினும் 89 ரன்களுக்கு தனது விக்கெட்டை கோலி இழக்க ஆட்டம் ஆஸ்திரேலியாவின் பக்கமாக மாறியது. தொடர்ந்து ராகுல், பாண்ட்யா மற்றும் ஜடேஜா விக்கெட்டை ஆஸ்திரேலிய பவுலர்கள் வீழ்த்தி வெற்றியை உறுதி செய்தனர். 

இறுதியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 338 ரன்களை 9 விக்கெட் இழப்பிற்கு எடுத்தது. அதன் மூலம் ஆஸ்திரேலியா 51 ரன்களில் வென்று தொடரையும் 2-0 என கைப்பற்றியுள்ளது. 

இந்த வெற்றியின் மூலம் கடந்த ஜனவரியில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 1-2 என ஏற்பட்ட இழப்பிற்கு வஞ்சம் தீர்த்துள்ளது ஆஸ்திரேலியா.