விளையாட்டு

இவ்ளோ ஓபனாவா கேட்கிறது.. களத்திலேயே சிகரெட் கேட்ட ஆஸ்திரேலிய வீரர்? குழம்பிய ரசிகர்கள்!

இவ்ளோ ஓபனாவா கேட்கிறது.. களத்திலேயே சிகரெட் கேட்ட ஆஸ்திரேலிய வீரர்? குழம்பிய ரசிகர்கள்!

JustinDurai

டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபஸ்சாக்னே களத்திலேயே சிகரெட் வேண்டும் என்ற தொனியில் செய்கை காட்டியதால் ரசிகர்கள் குழம்பினர்.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி தலா 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய சூழலில், 3வது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது நடந்த ஒரு சம்பவம் மைதானத்தில் கலகலப்பை ஏற்படுத்தியது. வழக்கமாக களத்தில் நிற்கும் பேட்ஸ்மேன் தண்ணீர், ஜூஸ், பேட் ஆகியவற்றைதான் கேட்பதை பார்த்திருப்போம். ஆனால் நேற்று ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபுசாக்னே வித்தியாசமாக சிகரெட் வேண்டும் என்ற தொனியில் செய்கை காட்டியதால் ரசிகர்கள் குழம்பினர். சிறிது நேரத்திற்குப்பின்தான் தனது ஹெல்மெட்டை சரி செய்ய லைட்டர் வேண்டும் என்று அவர் கேட்டது அனைவருக்கும் புரிந்தது.

மார்னஸ் அணிந்திருந்த ஹெல்மெட்டில் உள்ள பிளாஸ்டிக் நீட்டிக்கொண்டு இருந்துள்ளது. இது அவருக்கு இடையூறாக இருந்த நிலையில் அவர், சிகரெட் லைட்டர் மூலம் பிளாஸ்டிக்கை சூட்டை ஏற்படுத்தி சரி செய்ய நினைத்தார். லைட்டர் வேண்டும் என்பதை புரிய வைப்பதற்காகவே சிகரெட் பிடிப்பதுபோல் செய்கை காட்டியிருக்கிறார். இதையடுத்து அவர் கேட்டது போலவே ஆஸ்திரேலியா அணியினர் கொண்டு வந்த லைட்டரை பயன்படுத்திய அவர் தன்னுடைய ஹெல்மெட்டை சரி செய்து தொடர்ந்து விளையாடினார். இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.