அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியில், டி20 போட்டி முடிந்து ஹோட்டல் திரும்பிக் கொண்டிருந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்களின் பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி நேற்று கவுஹாத்தியில் உள்ள பர்சபாரா மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றுபெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 118 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது ரசிகர்ளை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது. கேப்டன் கோலி, தவான், சர்மா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜாதவ் மற்றும் பாண்ட்யா மட்டும் இருபது ரன்களுக்கு மேல் எடுத்ததால் இந்திய அணி 100 ரன்கள் கடக்க முடிந்தது. இல்லையென்றால், குறைவான ரன்களுக்குள் ஆட்டமிழந்திருக்கும். இந்த தோல்வியால் டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலை எட்டியுள்ளது.
இந்த நிலையில், ஆட்டம் முடிந்து மைதானத்தில் ஹோட்டல் அறைக்கு திரும்பிக் கொண்டிருந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்களின் பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த கல்வீச்சில் பேருந்தில் கண்ணாடி உடைந்தது. இருப்பினும் எந்த வீரர்களுக்கும் காயம் ஏற்படவில்லை. நேற்று இரவு 10 மணியளவில் போட்டி முடிந்து ஹோட்டல் திரும்பிக் கொண்டிருக்கையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பிஞ்ச் இந்த சம்பவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு கருத்து தெரிவித்தார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக உள்ளூர் காவல்நிலையத்தில் ஆஸ்திரேலிய அணி தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அஸ்ஸாம் கிரிக்கெட் சங்கத்தின் துணைத் தலைவர் சாய்கியா தெரிவித்துள்ளார்.