விளையாட்டு

ஆஷஸ் 4வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி 

ஆஷஸ் 4வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி 

webteam

இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் 185 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிப் பெற்றுள்ளது. 

மான்செஸ்டர் நகரில் உள்ள மைதானத்தில் இங்கிலாந்து ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் இரட்டை சதம் விளாசி அசத்தினார். இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 301 ‌ரன்‌களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. ஹசல்வுட் 4 விக்கெட்டுகளையும் ஸ்டார்க், கம்மின்ஸ் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, 186 ரன்கள் சேர்த்த நிலையில் டிக்ளேர் செய்தது. இரண்டாவது இன்னிங்ஸில் ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் கடந்து, ஆஸ்திரேலியா 383 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்க உதவினார். பின்னர் பேட் செய்த இங்கிலாந்து அணி 4 ஆம் நாள் ஆட்டநேர முடிவில், இரண்டு விக்கெட் இழப்பிற்கு ‌18 ரன்கள் சேர்த்திருந்தது. 

இதனைத் தொடர்ந்து ஐந்தாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மூன்றாவது விக்கெட்டிற்கு சிறிது நேரம் டென்லி மற்றும் ஜேசன் ராய் ஆகியோர் நிலைத்து ஆடினர். ஜேசன் ராய் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து பென் ஸ்டோக்ஸ் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் டென்லி 53 ரன்களுக்கு வெளியேறினார். 

இதனையடுத்து வந்த இங்கிலாந்து வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். எனவே இங்கிலாந்து அணி 197 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 185 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. . 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற முன்னிலை பெற்றது. ஏற்கெனவே ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரை அந்த அணி வென்று இருந்தது. எனவே இந்தத் தொடரின் அடுத்தப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிப் பெற்றாலும் ஆஷஸ் கோப்பை ஆஸ்திரேலிய அணிக்கே செல்லும். ஆகவே ஆஷஸ் கோப்பையை ஆஸ்திரேலியா தக்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.