விளையாட்டு

ஆஸ்திரேலியா 191 ரன்களுக்கு ஆல் அவுட்! 4 விக்கெட் எடுத்து அசத்திய அஸ்வின்

ஆஸ்திரேலியா 191 ரன்களுக்கு ஆல் அவுட்! 4 விக்கெட் எடுத்து அசத்திய அஸ்வின்

EllusamyKarthik

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. அடிலெய்ட் மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 244 ரன்களை குவித்தது. விராட் கோலி 74, புஜாரா 43, ரகானே 42 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் 4, பேட் கம்மின்ஸ் 3 விக்கெட் சாய்த்தனர்.

அதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்க்ஸை தொடங்கியது. பும்ரா, ஷமி, உமேஷ் யாதவ், அஷ்வின் என இந்திய பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்து கொண்டே இருந்தது ஆஸ்திரேலியா. மேத்யூ வேட், ஜோ பேர்ன்ஸ், ஸ்மித், ஹெட், கேமரூன் கிரீன், லபுஷேன், கம்மின்ஸ், ஸ்டார்க், நாதன் லியோன், ஹேசல்வுட் மாதிரியான பேட்ஸ்மேன்கள் அவுட்டாகியிருந்தனர். 

டிம் பெய்ன் அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவுக்காக 73 ரன்களை குவித்தார். 72.1 ஓவரில் 191 ரன்களை ஆஸ்திரேலியா குவித்து ஆல் அவுட்டானது. அதையடுத்து இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்க்ஸை 54 ரன்கள் முன்னிலையில் விளையாடி வருகிறது. இந்திய அணி தரப்பில் பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

கடந்த இன்னிங்ஸை போல் பிரித்வி ஷா மீண்டும் சொதப்பினார். தான் சந்தித்த நான்காவது பந்திலேயே 4 ரன்களில் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சில் க்ளின் போல்ட் ஆகி ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்ஸிலும் ஸ்டார் பந்துவீச்சில் இரண்டாவது பந்திலேயே டக் அவுட் ஆகி சொதப்பி இருந்தார். பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய சுப்மன் கில்க்கு பதிலாக சொதப்பலாக விளையாடிய பிரித்வி ஷாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது ஏற்கனவே விமர்சனத்தை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் நாள் ஆட்டத்தில் மட்டும் இந்தியா - ஆஸ்திரேலியா என மொத்தமாக 15 விக்கெட்டுகள் வீழ்ந்துள்ளன. பும்ரா (2), அஷ்வின் (4), உமேஷ் யாதவ் (3) மாதிரியான பவுலர்கள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை வேட்டையாடினர். இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 9 ரன்களை குவித்து ஆட்டத்தில் 62 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.