விளையாட்டு

2 பேர் சதம் அடித்தும் ஆஸி.யிடம் பாக். சரண்டர்!

webteam

பாகிஸ்தானுக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி அபாரமாக வெற்றி பெற்றது. 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வரும் இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளில் வென்று ஆஸ்திரேலிய அணி, தொடரை கைப்பற்றி விட்டது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒரு நாள் போட்டி, துபாயில் நேற்று நடந்தது.

பாகிஸ்தான் கேப்டன் சோயிப் மாலிக் காயம் அடைந்ததால் அவருக்கு பதிலாக இமாத் வாசிம், கேப்டன் பொறுப்பை ஏற்றார். முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் குவித்தது. 82 பந்தில் 98 ரன் விளாசிய கிளன் மேக்ஸ்வெல் ரன்–அவுட் ஆகி, 2 ரன்னில் சதத்தை தவறவிட்டார். உஸ்மான் கவாஜா 62 ரன்களும், விக்கெட் கீப்பர் அலெக்ஸ் காரி 55 ரன்களும், கேப்டன் ஆரோன் பின்ச் 39 ரன்களும் எடுத்தனர். 

பின்னர் 278 ரன்கள் இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி ஆடியது. அந்த அணியில் அபித் அலியும் (112) விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானும் (104) அபாரமாக ஆடி சதம் அடித்தனர். இருந்தாலும் அந்த அணியால், 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 271 ரன் மட்டுமே எடுக்க முடிந் தது. இதையடுத்து 6 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் கோல்டர் நைல் 3 விக்கெட்டும் ஸ்டோயினிஸ் 2 விக்கெட்டும் ரிச்சர்ட்சன், ஜம்பா, லியான் தலா ஒரு விக்கெட் டையும் வீழ்த்தினர். மேக்ஸ்வெல் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.