விளையாட்டு

ஆஸி.யுடன் இன்று மோதல்: வெற்றியுடன் விடைபெறுமா தென்னாப்பிரிக்கா?

ஆஸி.யுடன் இன்று மோதல்: வெற்றியுடன் விடைபெறுமா தென்னாப்பிரிக்கா?

webteam

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு லீக் போட்டிகள் நடக்கின்றன. இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு நடக்கும் போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன. ஆறு மணிக்கு நடக்கும் போட்டியில் ஆஸ்திரேலியா- தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடுகின்றன.

மான்செஸ்டரில் நடக்கும் ஆஸ்திரேலிய- தென்னாப்பிரிக்க அணிகளின் போட்டிதான் நடப்பு உலக கோப்பையில் கடைசி லீக் போட்டி. ஆஸ்திரேலிய அணி, 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அந்த இடத்தை தக்க வைக்க, இன்று கடுமையாகப் போராடும். அந்த அணி பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக இருக்கிறது. கேப்டன் ஆரோன் பின்ச், வார் னர், கவாஜா, விக்கெட் கீப்பர் கேரி ஆகியோர் பேட்டிங்கில் மிரட்டுகிறார்கள். வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் இதுவரை 24 விக் கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இன்றைய போட்டியிலும் அவர் அசத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.

தென்னாப்பிரிக்க அணி, அரை இறுதி வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்டது. 5 புள்ளியுடன் இருக்கும் அந்த அணி அனைத்து வகையிலுமே தடுமாறி வருகிறது. பேட்டிங்கில் கேப்டன் டு பிளிசிஸ், ஆம்லா, டிகாக், டேவிட் மில்லர் ஆகியோரும் பந்து வீச்சில் ரபாடா, நிகிடி ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே இன்றைய போட்டியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை சமாளிக்க முடியும். 

அந்த அணியில் மூத்த வீரர் இம்ரான் தாஹிர் மட்டுமே நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்தப் போட்டி யுடன் அவர், ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். அதனால் தொடரை வெற்றியுடன் நிறைவு செய்ய அந்த அணி முயற்சிக்கும்.

இரு அணிகளும் இதுவரை 99 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஆஸ்திரேலியா 48 முறையும், தென்னாப் பிரிக்‌கா 47 முறையும் வெற்றி கண்டுள்ளன.‌ 3 போட்டிகள் டையில் முடிந்தன. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை.