விளையாட்டு

சாதனையை நழுவ விட்ட ஆரோன் பின்ச்: தொடரை வென்றது ஆஸி!

சாதனையை நழுவ விட்ட ஆரோன் பின்ச்: தொடரை வென்றது ஆஸி!

webteam

பாகிஸ்தானுக்கு எதிரான 3 வது ஒரு நாள் போட்டியிலும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி, தொடரைக் கைப்பற்றியது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வரும் இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. அந்த அணியின் கேப்டன் ஆரோன்
பின்ச் அபார சதம் அடித்தார். இரண்டாவது போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதிலும் பின்ச் 153 ரன் எடுத்தார். இதன் மூலம் சர்வதேச டி-20 (172 மற்றும் 156 ரன்கள்) மற்றும் ஒருநாள் போட்டி (153) என இரண்டு வித கிரிக்கெட்டிலும் 150 ரன்னுக்கு மேல் எடுத்த முதல் வீரர் என்ற புது சாதனையை அவர் படைத்தார். 

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3 வது ஒரு நாள் போட்டி, அபுதாபியில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, 6 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் சேர்த்தது. அதிகப்பட்சமாக கேப்டன் ஆரோன் பின்ச் 90 ரன் எடுத்து யாசிர் ஷா பந்துவீச்சில் ஆட்டமிழந் தார். முதல் 2 ஆட்டங்களில் சதம் அடித்திருந்த பின்ச், இந்த ஆட்டத்திலும் சதம் அடித்திருந்தால், ஒரு நாள் கிரிக்கெட்டில் ‘ஹாட்ரிக்’ சதம் அடித் த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை அடைந்திருப்பார்.

அந்த வாய்ப்பை 10 ரன்னில் அவர் நழுவ விட்டார். (தொடர்ந்து 4 சதங்கள் அடித்து சாதனை படைத்துள்ளார் இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்ககாரா). ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வெல் 55 பந்தில் 71 ரன்னும் ஹேண்ட்ஸ்கோம்ப் 47 ரன்னும் எடுத்தனர். 

பின்னர் 267 ரன்கள் இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி ஆடியது. ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ், சுழல் பந்துவீச்சாளர் ஆடம் ஜம்பா ஆகியோர் பாகிஸ்தான் வீரர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் அவர்கள் தங்கள் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தனர். இறுதியில் அந்த அணி 44.4 ஓவர்களில் 186 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனால் 80 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, தொடரையும் கைப்பற்றியது.

அதிகப்பட்சமாக அந்த அணியில் இமாம் உல் ஹக் 46 ரன்னும் இமாத் வாசிம் 43 ரன்னும் எடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் ஜம்பா 4 விக்கெட்டு ம் கம்மின்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.